கொரோனா பாதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.68 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 1.04 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும், நேற்று ஒரே நாளில் 64,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44.98 லட்சமாக உயர்ந்திருந்தது. அமெரிக்காவில் கொரோனாவிற்கான உயிரிழப்பு அதிகம் தான். நேற்று ஒரே நாளில் 1237 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.52 லட்சமாக உயர்வு.

அமெரிக்காவை போலவே, அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான நம் இந்தியாவிலும், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.31 லட்சமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 9.08 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்திருக்கின்றனர் என்றும் மேலும் 5,09,447 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 6 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. இதில் சென்னையில் மட்டும் நேற்று ஒரு நாளில் மட்டும் ஆயிரத்து 107 பேரும், ஒட்டுமொத்தமாக 96 ஆயிரத்து 964 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், 4 ஆயிரத்து 707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் பழனிச்சாமி, ``கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க, சித்த மருந்தான கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து 4 லட்சத்திற்கும் அதிகமான பிற மாநில தொழிலாளர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 63 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன. பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்று கூறியிருந்தார்

இப்படியான சூழலில் உலக சுகாதா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் முக்கியமான ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில் மிக முக்கியமாக, ``உலக நாடுகள் தற்போது எதிர்கொண்டிருப்பது கொரோனாவின் முதல் அலை; இது சீசனல் பாதிப்பல்ல" என்று கூறியிருக்கிறார் அவர்.

அந்த அதிகாரி, உலக சுகாதார அமைப்பின் அதிகாரியான மார்க்ரெட் ஹாரிஸ் (Margaret Harris) என்பவர். இவர் நேற்று ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: `உலக நாடுகள் அனைத்தும் முதல் கட்ட கொரோனா அலையில்தான் உள்ளோம். இன்னொரு மிகப் பெரிய அலையாக இது மாற்றம் அடையும். கொரோனா பாதிப்பு என்பது மேலும் அதிகரிக்கும். இருப்பினும் இது பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் தொற்றுநோய் அல்ல. ஆகவே ஒழிந்த பிறகு மீண்டும் ஏற்படாது என நம்பலாம். இருப்பினும் இப்போதைக்கு இதை நாம் மிக கவனமாக அணுக வேண்டும். அமெரிக்காவின் கோடை காலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என நாங்கள் கணிக்கிறோம். கொரோனா வைரஸ் என்பதை அனைத்து காலநிலைகளையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம்"

-ஜெ.நிவேதா