தடுப்பூசிக்கான பணிகள் அனைத்தும் நாடுகள் தோறும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாடும், தாங்கள்தான் முதலில் தடுப்பூசியைக் கண்டறிய வேண்டும் எனத் தீவிரமாக எண்ணிக் கொண்டிருக்கிறது. இந்தியா சார்பில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, `தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும்' எனக் கூறியிருக்கிறார்.
 
இந்தியாவைப் போல கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் உலகின் பல்வேறு நாடுகள், இறுதிக் கட்டத்தை நோக்கி தற்போது நகர்ந்துள்ளன.

அந்தவகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பல சோதனைகளுக்குப் பின்னர் இறுதியாக மனிதர்களுக்குக் கொடுத்துச் சோதித்து வருகின்றன. நேற்றைய தினம் கூட பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பலகலைக்கழகத்தினர் தாங்கள் தடுப்பூசியை கண்டறிந்துவிட்டதாக கூறி அறிவித்திருந்தனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இப்போதைக்கு 7 நிறுவனங்கள் தடுப்புப் பணியில் இறங்கி உள்ளன. பிற நிறுவனங்கள் அனைத்தும் முதற்கட்ட ஆய்வில் இருக்கும் இந்த நேரத்தில், ஐதராபாத்தைச் சேர்ந்த  பாரத் பயோடெக் நிறுவனம் மட்டும், மனிதர்கள் மீதான முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளுக்கு அனுமதியைப் பெற்றுவிட்டது. இந்த நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவுடன் இணைந்து தங்கள் தடுப்பூசி சோதனைகளைச் செய்து வருகிறது. இவர்களின் விலங்குகள் மீதான ஆய்வுகள் முடிந்துவிட்ட சூழலில், மனிதர்கள் மீதான ஆய்வுகள் தொடங்கப்பட உள்ளது.

மனிதர்கள் மீதான ஆய்வில், இந்த மருந்தை சில நாட்களுக்கு முன் மூன்று நபர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த  சோதனையை நடத்த நாடெங்கும் உள்ள 12 மருத்துவமனைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கே தேர்வு செய்யப்பட்டுள்ள மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, இதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீதான சோதனை நேற்று தொடங்கப்படுகிறது.
 
தடுப்பு மருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவர்களில் சிலருக்கு உண்மையான தடுப்பு மருந்தும் வேறு, சிலருக்குத் தடுப்பு மருந்து என்னும் பெயரில் உடலில் எவ்வித விளைவும் உண்டாக்காத சத்து மருந்தும் அளிக்கப்பட உள்ளன. அதில் யாருக்கு உண்மையான மருந்து தரப்படுகிறது மற்றும் யாருக்குச் சாதாரண மருந்து தரப்படுகிறது என்பது மருந்தைப் பெறுபவர் மற்றும் செலுத்துவோருக்குச் சொல்லப்படாது. இந்த மனித சோதனையின் முதல் கட்டத்தில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுமா என்பது சோதிக்கப்படும். இரண்டாம் கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து அந்த வைரஸூக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பது பரிசோதிக்கப்படும்.

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் முழு உடல் தகுதியுடன், எந்த வித நோயும் இல்லாமல் இருத்தல் வேண்டும். அவர்கள் வயது 18 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும் என்றும் அந்த நபர்களுக்கான பதிவு இன்று முதல் தொடங்கும் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் சஞ்செய் ராய் நேற்று தெரிவித்திருந்தார்.

அதேபோல தன்னார்வலராக இருப்பவர்களுக்கு, இதற்கு முன் கொரோனா ஏற்பட்டிருக்கக்கூடாது என்றும், வாழ்வியல் நோய் பாதிப்பு ஏதும் இருக்கக்கூடாது என்று எச்சரிக்கை மட்டும் தரப்பட்டிருந்தது.

டெல்லி எய்ம்ஸ் போல, இந்திய அளவில் நான்கு இடங்களில் மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடைபெறும் எனக் கூறியிருந்தனர் ஆய்வுக்குழுவினர். அந்த 4 இடங்களில், தமிழகமும் ஒன்று.

பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, ஹரியானாவில் உள்ள பண்டிட் பகவத் தயாள் ஷர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் நிறுவனம் உள்ளிட்ட மூன்று இடங்களில் இவையாவும் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

தற்போது தமிழகத்தில் தொடங்கியுள்ள சோதனையின் முதல்கட்டமாக, சோதனைக்கு தயாராக உள்ளவர்களின் உடல்நிலை ஆராயப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, மருந்தை செலுத்தவுள்ளதாக எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல் பரிசோதனை முடிவடைய 14 நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பெ. மதலை ஆரோன்