உலக அளவில் கொரோனா பற்றிய தவறான தகவல்களை அதிகம் வெளியிட்ட நபராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனா பற்றிய கட்டுரைகளை 38 மில்லியன் ஆங்கிலக் கட்டுரைகளை ஆய்வு செய்தனர். அதில், கொரோனா குறித்து உலகிலேயே அதிக தவறான செய்திகளை அளித்தவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒட்டுமொத்த தவறான செய்திகளில் அதிகபட்சமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 38 சதவீத தவறான தகவல்களை அளித்துள்ளார்.

இதனை இன்போடெமிக் (infodemic) என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். இது குறித்து ஆய்வின் முதன்மை ஆசிரியரான சாரா இவானேகா கூறுகையில், ‛உலகிலேயே கொரோனா தொடர்பான தவறான தகவல்களை அதிகம் அளித்த ஒற்றை மனிதராக அமெரிக்க அதிபர் இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

சில மாதஙக்ளுக்கு முன், உலகளாவிய இந்த நோய்த் தொற்றை எதிர்கொள்வதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ். அவர் இதுபற்றி மேலும் பேசும்போது நோய் குறித்து பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவருவதையும், இந்தத் தகவல்கள் வைரஸை விடவும் வேகமாகப் பரவுவதையும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். தவறான தகவல்களைப் பரப்புவதை, ஆங்கிலத்தில் இன்ஃபோடெமிக் என்றும், இது தொடரும்போது மிகவும் ஆபத்தான விஷயமாக மாறிவிடும் என்றும் கூறுகின்றனர் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவியலாளர்கள்.

இன்ஃபோடெமிக் ஏன் ஆபத்தானது?

இன்ஃபோடெமிக் என்பது, `தீர்வுகளைச் சிக்கலாக்கும் அளவுக்கதிகமான தகவல்' எனப் பொருள்படும். எந்தவொரு நோய்குறித்தும், அளவுக்கதிகமான தகவல்கள் பரப்பப்பட்டால், மக்களுக்கு நோய்குறித்த குழப்பம் அதிகரித்துவிடும் அபாயம் உள்ளது. அந்தக் குழப்பம் அவர்களைத் தவறான பாதைக்கு இட்டுசெல்லும் ஆபத்தும் உள்ளது. அந்தத் தவறான பாதை, நோய் பாதிப்பை மக்கள் மத்தியில் தீவிரப்படுத்தி, மக்களின் உயிரோடு விளையாடிவிடும்.

இந்த இன்ஃபோடெமிக் எதிர்ப்பு விஷயத்தில், கொரோனா வைரஸ் தடுப்புக்காகச் செயல்படும் ஐக்கிய நாடுகளின் மருத்துவ அமைப்பு, உலக சுகாதார நிறுவனத்துக்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அந்தோனி, தனது ட்விட்டர் பதிவில் ``நம்முடைய பொதுவான எதிரி, வைரஸ்தான் என்றபோதிலும், அந்தப் பட்டியலில் 'பரப்பப்படும் தவறான தகவல்கள்' என்பதையும் இனி நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், இந்த கோவிட் - 19 பேண்டெமிக்கில், நமக்கு இனி இரண்டு எதிரிகள் உள்ளன" எனக்கூறி வேதனை தெரிவித்திருந்தார்.

``மருத்துவ வசதிகளையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவது போலவே, அறிவியல் ரீதியான உண்மைகளை அனைவரும் அதிகம் பகிர வேண்டும். மீள்தல் குறித்த நம்பிக்கையையும் ஒற்றுமையையும் மக்கள் ஒருவருக்கொருவர் இனி விதைக்க வேண்டும்" என இதற்கான தீர்வுகளையும் அவர் சொல்கிறார்.

ஐ.நா அவை மட்டுமன்றி, உலகின் மூத்த அறிவியலாளர்கள் பலரும்கூட, கடந்த சில தினங்களாக இன்ஃபோடெமிக் பற்றிப் பேசி வருகிறார்கள். இன்ஃபோடெமிக் விஷயத்தில், சாதாரண இணையதளவாசி தொடங்கி உலக நாடுகளின் தலைவர்கள் வரை ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பதையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். `நீராவி பிடித்தால் கொரோனா வைரஸை அழித்துவிடலாம்' என சாமானிய இணையதளவாசியொருவர் கூறினால், அமெரிக்க அதிபர் `டிஸ்இன்ஃபெக்டன்ட்டை உடலுக்குள் செலுத்திப் பார்க்கலாமே' என காமெடி செய்கிறார்.

இப்படியான அடிப்படை வாதமற்ற கருத்துகளைப் பரப்புவதென்பது முற்றிலும் தவறான செயல் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து எச்சரித்துவந்தபோதிலும், இதுபோன்ற தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுவதும், அதையும் நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களே செய்வதும், மிக மிக ஆபத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது.