கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்தும் வகையில், ஸ்புட்னிக்-5 என்ற பெயரில் உலகின் முதலாவது தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்து அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், “உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை ரஷியா பதிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டு உலகை அதிர வைத்தார். ஆனால் தடுப்பூசி உருவாக்கத்தில் பல்லாயிரகணக்கானோருக்கு செலுத்தி சோதிக்கும் மூன்றாவது கட்ட பரிசோதனை குறித்த விவரங்களை அந்த நாடு வெளியிடாதது, உலக நாடுகளை சந்தேகப்பார்வை பார்க்க வைத்தது. தடுப்பூசி விஷயத்தில் ரஷியா அவசரப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
 
ஆனால் அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ, கொரோனா தடுப்பூசி உற்பத்தி அடுத்த 2 வாரங்களில் தொடங்கும் என கூறி மேலும் பரபரக்க வைத்தார். அது மட்டுமல்லாமல், இந்த தடுப்பூசி தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் ஆதாரமற்றவை எனவும் அவர் நிராகரித்தார்.

இந்த சூழலில் சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் புரூஸ் அய்ல்வார்டு கூறுகையில், ரஷியாவின் தடுப்பூசி பற்றி முடிவு செய்வதற்கு எங்களிடம் (உலக சுகாதார நிறுவனத்திடம்) போதிய தகவல்கள் இல்லை. உலக சுகாதார நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், மொத்தம் 9 தடுப்பூசிகள் இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ரஷிய தடுப்பூசி, அந்த 9 தடுப்பூசிகளில் ஒன்றாக இல்லை. மேலும், இந்த தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்களை பெறுவதற்கு உலக சுகாதார நிறுவனமானது, ரஷியாவுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார். 
 
தடுப்பூசி பற்றி உலகளவில் எழுந்துள்ள விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ கூறியதாவது, உலகின் முதல் கொரோனா தடுப்பூசி பற்றிய விமர்சனங்கள், பெரும்பாலும் சோதனைகள் பற்றிய தகவல்கள் இல்லாததால் வெளியானவை ஆகும். ஏற்கனவே 6 தடுப்பூசிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மேடையில்தான் எங்கள் தடுப்பூசி பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றல்ல. 

ரஷ்ய நாட்டின் தடுப்பூசி கண்டுபிடிப்பு குறித்து உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர். தடுப்பூசி விவகாரத்தில் அவசரப்படக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் மேலும் ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி வெக்டர் இன்ஸ்டிடியூட் என அழைக்கப்படும் ரஷ்ய அரசின் வைராலஜி மற்றும் உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்குவதாகவும், மேலும் இதை தேசிய சுகாதார கண்காணிப்பு அமைப்பான ரோஸ்போடிரெப்நட்சார் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கான மருந்து பரிசோதனை இரண்டு கட்டமாக நடைபெற்றுள்ளது, அதில் முதற்கட்டத்தில் 14 பேரும், இரண்டாவது கட்டத்தில் 43 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் நலமுடன் இருப்பதாகவும், சுகாராத கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனை முழுவதுமாக வெற்றியடையும் பட்சத்தில், கூடிய விரைவில் 2 வது தடுப்பூசியை ரஷ்யா அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது.