உலகம் முழுவதும் சுமார் 3.4 கோடி பேர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். `பொருளாதாரத்தில் பின்தங்கிய 133 நாடுகளுக்குக் கொரோனா மருத்துவப் பரிசோதனை உபகரணங்களை இலவசமாக வழங்க உள்ளோம்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் கொரோனாவுக்கு இரு வகையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. பி.சி.ஆர்., சோதனை மாதிரி இல்லாமல், இந்த அதிவிரைவு 'ரேபிட் கிட்'கள், 15 முதல் 30 நிமிடங்களில் முடிவைத் தருகின்றன. இம்மாதிரியான விரைவான முடிவுகள் கொரோனா பரவலைத் தடுக்கும்.

மேலும், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டவர்களையும் விரைவில் கண்டறியலாம். எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய, 133 நாடுகளுக்கு இம்மாதிரியான கொரோனா மருத்துவப் பரிசோதனை உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்க இருக்கிறோம். அடுத்த ஆறு மாதங்களுக்கு இவற்றை முழுமையாக வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, 120 மில்லியன் பரிசோதனைக் கருவிகள் தேவைப்படும் என, வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ரேபிட் கிட்ஸ் முடிவில் தெரியவரும் கொரோனா பரிசோதனையின் முடிவுகளுடைய துல்லியத்தன்மை, கேள்விக்குறிதான் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

ரேபிட் டெஸ்ட் செயல்படும் விதம் இதுதான். ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றால் அவர் உடம்பில் அந்த வைரஸில் உள்ள எதிர்ப்புத் திறனூட்டியை (Antigen) எதிர்க்க, எதிர்ப்புரதம் (Antibody) நம் உடம்பில் உருவாகும். அதாவது IgM, IgG என்ற ஆன்ட்டிபாடிகள் உருவாகும். ரேபிட் டெஸ்ட் பரிசோதனை, இந்த இரு ஆன்டிபாடிகளைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரேபிட் டெஸ்ட் பரிசோதனைக் கருவி, கர்ப்பத்தை உறுதிசெய்யும் பரிசோதனை அட்டையை (Pregnancy testing kit) ஒத்த அமைப்பில் இருக்கும். ரேபிட் டெஸ்ட் பரிசோதனைக்கு சம்பந்தப்பட்டவரின் ரத்தம், குருதி நீர் (plasma), குருதி ஊனீர் (Serum) ஆகியன மாதிரிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மாதிரியில் IgM, IgG ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டால், பரிசோதனைப் பெட்டகத்தில் அதைக் காட்டித்தரும் இடத்தில் வண்ணம் மாறும். இது நிறப்பகுப்பியல் சோதனை (Chromatographic Technique). இந்த வண்ணமாறுதல் மூலம் ஒருவருக்குக் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். மருத்துவர்கள் மட்டுமன்றி, மருத்துவப் பணியாளர்கள் யாரும் இந்தப் பரிசோதனையைக் கையாளலாம்.

ஆனால், இந்தப் பரிசோதனையின் நம்பகத்தன்மை PCR பரிசோதனையைவிடக் குறைவு. காரணம், சம்பந்தப்பட்டவருக்கு வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடி, மாதிரியில் இருந்தால் மட்டுமே இந்தப் பரிசோதனை `பாசிட்டிவ்' எனக் காட்டும். ஒருவேளை அவருக்குத் தொற்று இருந்தும், ஆன்டிபாடி உருவாகும் காலத்துக்கு முன்னரே அதிவிரைவு பரிசோதனை செய்யப்பட்டிருந்தால், ரிசல்ட்டை `நெகட்டிவ்' என்றுதான் காட்டும்.

இதன்படி பார்த்தால், மிகச்சிறந்த துல்லியம் மிகுந்த பரிசோதனை முடிவை நம்மால் ரேபிட் கிட்டில் எதிர்ப்பார்க்க முடியாது. இருப்பினும் இப்போதைக்கு இதன் தேவை உலகளவில் அதிகமாக இருக்கிறது என்பதால், உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பை, நம்மால் தவிர்க்க முடியாது.

முதற்கட்டமாக உலக சுகாதார நிறுவனம், ஏழை நாடுகளுக்கு கொரோனா பரிசோதனைக்கான 12 கோடி 'கிட்'களை விரைவில் வழங்க உள்ளது. பணக்கார நாடுகள் கொரோனா பரிசோதனைக்கு பி.சி.ஆர். முறையை பயன்படுத்துகின்றன. இதற்கு ஆய்வக வசதிகள் தேவை. பரிசோதனை முடிவுகள் தெரிய மூன்று நாட்கள் ஆகும். இச்சோதனைக்கான செலவும் அதிகம். செலவு குறைந்த 'ரேபிட்' பரிசோதனையில் 30 நிமிடங்களில் கொரோனா பாதிப்பு குறித்த முடிவை அறிந்து கொள்ளலாம். இதற்கு ஆய்வகம் தேவையில்லை. ஒரு சோதனை 'கிட்' விலை 375 ரூபாய். இது பி.சி.ஆர். சோதனை கிட் விலையை விட பல மடங்கு குறைவு. ஏழை நாடுகள் இத்தகைய பரிசோதனைகளை கூட மேற்கொள்ள வசதியில்லாமல் உள்ளன என்பதால், இப்போதைக்கு இது வரவேற்கத்தக்க அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.