இந்தியா முழுவதும் கொரோனா மிகவும் வேகமாக பரவி வருகின்றது. 8 லட்ச நோயாளிகள் என்ற எண்ணிக்கையை கடந்து, இந்தியாவில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் 20,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கே அதிகரித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரியிலேயே பரவத் தொடங்கிய பாதிப்புதான் என்றாலும்கூட, இந்தியாவில் இது தீவிரமாகத்தொடங்கியது மார்ச் மாதத்துக்குப் பிறகுதான். அதற்கு முன் வரை, மிக குறைவான அளவே நோயாளிகள் இருந்துவந்தனர். இந்தியாவிலேயே முதன்முதலாக, கேரளாவில்தான் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். உடனடியாக அந்த நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு, மேற்கொண்டு நோயாளிகள் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

அடுத்தடுத்த வாரஙக்ளில், வெளிநாடுகளில் தங்கியிருந்த கேரள மக்கள் நாடு திரும்பியதை தொடர்ந்து, அங்கு பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இருப்பினும், கடவுளின் தேசமான கேரளா கொரோனாவை மிகவும் நேர்த்தியாக கையாண்டது. அதிகமான பரிசோதனைகளை செய்த முதன்மையான மாநிலமும், கேரளாதான். எந்தவொரு பேரிடரையும், கேரளா எளிதாக கையாளும் என சொல்லும் அளவுக்கு, அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பலரின் பாராட்டையும் பெற்றது.

இன்றைய தேதிக்கு, கொரோனாவை மிகவும் நேர்த்தியாக கையாண்ட மாநிலம் எதுவென கேட்டால், அது கேரளாதான். கடுமையான கட்டுப்பாடுகள், விதிமுறைகள், பராமரிப்பு பணிகள் என கேரள அரசு, மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலமாக விளங்கும் கேரளாவில், திருவனந்தபுரம் பகுதியில் மட்டும் வேகமாக கொரோனா பரவி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே அப்பகுதியில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால் திருவனந்தபுரத்தில் உள்ள பூந்துரா என்ற கிராமத்திற்கு சென்ற மருத்துவக் குழுவினருக்கு அந்தக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் மோசமாக நடந்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நிகழ்வு, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றது.

வேகமாக கொரோனா பரவும் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ள பூந்துரா கிராமத்துக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக, அப்பகுதியை சேர்ந்த மருத்துவக் குழுவினர் காரில் சென்றுள்ளனர்.

அவர்களை பின் தொடர்ந்த 70க்கும் மேற்பட்ட ஊர்க்காரர்கள், அந்த வாகனத்தை  ஊருக்குள் விடாமல் வழிமறித்துள்ளனர். மேலும் வாகனத்தை கடுமையாக தாக்கி, தகாத சொற்களால் மருத்துவக் குழு நபர்களை வசைபாடி இருக்கிறார்கள். அப்பகுதியிலிருந்து உடனடியாக அங்கிருந்து போகச் சொல்லி இருக்கிறார்கள். பேசும்போது, இடையே ``எங்களுக்கு கொரோனா என்றால் அது உங்களுக்கு வரட்டும்" எனக் கூறி மருத்துவக் குழுவினரின் முகத்தின் முன்பு இருமியதாகவும் அங்கிருந்த அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். 

கிராம மக்களின் இந்த செயலைக் கண்ட மருத்துவக் குழுவினர், அவசரமாக அந்தக் கிராமத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். போலீசார் உதவியின்றி அந்த கிராமத்துக்குள் தங்களால் மீண்டுமொரு செல்ல இயலாது என அம்மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சரான டீச்சர் ஷைலஜா, இந்த நிகழ்வுகளை குறித்து தற்போது கேட்டறிந்து பகிர்ந்திருக்கிறார். தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருக்கும் அமைச்சர் ஷைலஜா, `இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஊர்மக்களின் இந்த நடவடிக்கையால், அங்கு சென்ற அதிகாரிகளை தங்களைத்தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிட்டிருக்கிறோம்' எனக்கூறியிருக்கிறார். இந்த நிகழ்வு மிகவும் கண்டனத்துக்குரியது என்று கூறி, கேரள முதல்வர் பிரணாயி விஜயனும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கேரளாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்காம்பல்லி சுரேந்திரன் இதுபற்றி பேசும்போது, ``பூந்தரா பகுதியை, கேரளாவின் முதல் சூப்பர் - ஸ்பெர்ட்டர் ஸ்பாட்டாக அரசு அறிவிக்க வேண்டும். இந்த இருமல் போராட்டம், நிச்சயம் அப்பகுதியில் பாதிப்பை இன்னும் தீவிரமாக பரப்பியிருக்கும் என்பதால், கூடுதல் கவனிப்பும், கட்டுப்பாடுகளும் இப்போது அங்கு தேவைப்படுகிறது" எனக்கூறியிருக்கிரார்.

பூந்தரா மக்களின் இந்த செயல்பாட்டுக்குப் பின்னால், எதிர்க்கட்சிகளின் கைகள் இருக்குமோ என்று தான் சந்தேகிப்பதாக கூறியிருக்கிறார் அம்மாநில முதல்வர் பிரணாயி விஜயன். ``எதுவாகினும், விரைவில் கண்டறியப்பட்டு, அப்பகுதியிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்படும்" எனக்கூறியிருக்கிறார் பிரணாயி.

- ஜெ.நிவேதா