கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துக் கொண்டிருக்கிறது என்று ஒவ்வொரு நாளும் அரசு சொல்லிக் கொண்டே இருக்கிறது. விரைவில், அனைத்து பிரச்னைகளும் சரியாகி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என அனுதினமும் மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உலக நாடுகள் அனைத்தும் இப்போது, கொரோனா சிகிச்சைக்கான மருந்தையும் - கொரோனா தடுப்புக்கான மருந்தையும் கண்டறிய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தினர், கொரோனாவின் உண்மையான தாக்கத்தை அன்றாடம் பத்திரிகையாளர்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர். அப்படி, நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, `கொரோனா வைரஸின் தாக்கம் எதிர்காலத்திலும் நீடிக்கும்' என்று உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறியிருக்கின்றார்.

“கொரோனா தொற்றுநோய் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படும் சுகாதார நெருக்கடி, இதன் விளைவுகள் மேலும் சில பத்தாண்டுகளுக்கு உணரப்படும் ”என்று டெட்ரோஸ் உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழுவின் கூட்டத்தில் கூறியிருக்கிறார்.

சில நாடுகளில் முன்பை விட அதிகமாக தொற்று அதிகரித்து வருவதால், டெட்ரோஸ் எச்சரித்தார். அவர் கூறுகையில், "கடுமையான தொற்றால் பாதிக்கப்படுள்ள பகுதிகளில் கூட, இன்னும் உலகின் பெரும்பாலான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது." என்று தெரிவித்தார்.

அனைத்து  நாடுகளும் இதன் தீவிரத்தை உணர்ந்து செயல்படுவது உலக மக்கள் நலனுக்கு நல்லது என்றும் WHO தலைவர் மேலும் கூறினார்.

சீனாவின் வுஹானில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பரவத் தொடங்கியதிலிருந்து இந்த தொற்றுநோயால் இதுவரையில் 6 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 17 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸால் அமெரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ, இந்தியா ஆகிய நாடுகள் சமீபத்திய வாரங்களில் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் பரவலைக் கட்டுப்படுத்த இப்போதைக்கு பொது முடக்கம் மட்டுமே ஓரளவுக்கு உகந்த வழியாக பார்க்கப்படுகிறது. ஆனால் நீண்ட பொது முடக்கங்கள், பொருளாதாரத்தை மிக மோசமாக பாதித்து வருகிறது. அதனால் உலகம் முழுக்க தளர்வுகள் - கட்டுப்பாடுகளுடன் அடங்கிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுவருகிறது. ஒரு சில நாடுகளில், கொரோனா சற்று குறைந்து வருகிறது. ஆனாலும் அங்கெல்லாம் இரண்டாவது அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என அச்சமும் நிலவுகிறது. இப்படி நீண்டுகொண்டே போகும் கொரோனா பாதிப்பானது, இப்போதைக்கு முடியாது என்பது போன்ற உலக சுகாதார நிறுவனத்தினரின் பேச்சு, அச்சத்தை அதிகப்படுத்தவே செய்கிறது.

இதற்கிடையில், சுமார் 150 க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் உலகம் முழுக்க, கொரோனா தடுப்பூசிகளை கண்டறிய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் அவற்றின் முதல் பயன்பாட்டை 2021ஆம் ஆண்டின் தொடக்கம் வரை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் கூறிவிட்டது.

பெரியவர்கள் மட்டுமன்றி, கொரோனாவால் குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள், 5 முதல் 17 வயது வரம்பிலானவர்கள், 18 முதல் 65 வயது வரம்பிலானவர்கள் என மூன்று பிரிவினரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளுக்கு 10 மடங்கு முதல் 100 மடங்கு அதிக கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வைரஸ் பற்றிய புரிதல் தற்போது அதிகரித்திருந்தாலும், பல கேள்விகளுக்கு பதில் இன்னமும் தெரியப்படவில்லை. அதனாலேயே அரசாங்களால் கொரோனா பரவலை நீண்ட காலத்துக்கு கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை. மக்களும் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். 

சூழல் விரைவில் சரியாக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை தவிர, வேறொன்றும் இப்போதைக்கு மக்களிடம் இல்லை!  நம்பிக்கையுடன் போராடுவோம்.