இந்தியாவின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 97,570 கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஒரே நாளில் அதிகரித்துள்ளன, இதை தொடந்ர்து  நாட்டில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 46,59,984 ஆக உயர்ந்து உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சத்தை தொடும் அளவுக்கான பாதிப்புகள் இந்தியாவில் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி,

`கடந்த 24 மணி நேரத்தில் 1,201 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 77,472 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்புகள் 36,24,196 பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுகுணமாகி உள்ளனர். இவர்களில் இப்போதைக்கு சிக்கிச்சையில் 9,58,316 பேர் உள்ளனர்.

அமெரிக்காவுக்குப் பிறகு உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா. 

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகத் மகாராஷ்ட்ரா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. மோசமான பாதிப்புக்குள்ளான இரண்டாவது மாநிலம் ஆந்திரா தொடர்ந்து  தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை இந்தியாவில் "வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது", ஏனெனில் மொத்த பாதிப்புகளில்  ஒரு சிறிய பகுதி மட்டுமே தற்போது நாடு முழுவதும் செயலில் உள்ளது'

என்பது நமக்கு தெரியவருகிறது.

இதில், ``குணமானோர் சதவீதத்திற்கும், இப்போது சிகிச்சையிலிருப்போரின் சதவீதத்திற்கும் இடையிலான இடைவெளி படிப்படியாக பரவலாக வளர்ந்து வருகிறது. மொத்த பாதிப்புகளில்  3/4 க்கும் மேற்பட்டவை (36 லட்சத்திற்கும் அதிகமானவை) குணமாகி விட்டன. ஆகவே இப்போது சிகிச்சையில் இருப்போர் (10.5 லட்சத்திற்கும் குறைவானது) ஒரு சிறிய விகிதம் மட்டுமே (இந்த எண்ணிக்கை, மொத்தமாக குணமானோரின் எண்ணிக்கையில் 1/4 க்கும் குறைவானது” என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) தரப்பிலும் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

``நாட்டில் செப்டம்பர் 11ஆம் தேதி வரை 5 கோடியே 51 லட்சத்து 89 ஆயிரத்து 226 கொரோனா தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. முன்னதாக செப்டம்பர் 10ஆம் தேதி 11,63,542 மாதிரிகள் பரிசோதித்ததை அடுத்து, மொத்த பாதிப்பு 5,40,97,975 ஆக இருந்தது" என்று கூறியுள்ளது.

இதோடு சேர்த்து, நாடு முழுவதும் கொரோனா எனப்படும் நோய்க்கிருமித் தொற்று குறித்த கள ஆய்வை ஐ.சி.எம்.ஆர் மேற்கொண்டது. அந்த ஆய்வில் கடந்த மே 11-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை 700 கிராமங்களில் சுமார் 28,000 பேரிடம் கொரோனா சோதனை நடத்தியிருந்தது ஐசிஎம்ஆர். இப்போது அந்த முடிவை வெளியிட்டுள்ளது.

அதில், பெரும்பாலான மாவட்டங்களில் காணப்படுகின்ற குறைவான பாதிப்பு இந்தியா தொற்று நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதைக் குறிப்பதாகவும், பெரும்பாலானோர் 2-வது முறையாக நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 18 முதல் 45 வயதுடையவர்களில் 43.3 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், 46 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 39.5 சதவீதம் பேருக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 17.2 சதவீதம் பேருக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புறங்களில் கொரோனா தொற்று மிக அதிகமாக 69.4 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 30.6 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த ஆய்வின் அடிப்படையில் மே மாத தொடக்கத்திலேயே 64 லட்சத்து 68,388 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.