கொரோனா தடுப்பூசியின் உலகளாவிய தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்தவொரு தடுப்பூசியும் அல்லது நிறுவனமும் மட்டுமே, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று சனோஃபி பாஸ்டரின் நிர்வாக துணைத் தலைவர் தாமஸ் ட்ரையம்பே கூறியுள்ளார். இருப்பினும், தடுப்பூசிகள் மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்று, உலக சுகாதார நிறுவனமும் அறிவித்திருந்தது.

இருப்பினும் தடுப்பூசிக்கான பணிகள் வேகமாகவும் விரைவாகவும் செய்யப்படு வருகிறது. உலகளைவில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு, இரண்டு தடுப்பூசிகள் மனித சோதனைகளுக்குள் இறங்கியுள்ளது.
 
ரஷ்யா மட்டும், தாங்கள் தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதாக கூறிவிட்டது. இருப்பினும் அதில் பாதுகாப்பின்மை பிரச்னை இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. குறிப்பாக, `எப்படி முழுமையாகச் சோதனை செய்யாமல் மனிதர்களுக்கு இதை அளிக்கலாம். இது பாதுகாப்பானதுதானா என்பதை உறுதி செய்யாமல் எப்படி மக்களுக்குக் கொடுக்க முன்வரலாம். ஏன் அரசு இவ்வளவு அவசரப்படுகிறது. இது பெரிய ரிஸ்க்' என்று பலரும் ரஷ்ய அரசை கேள்வி கேட்டு வருகிறார்கள்.

அத்தனை விமர்சனத்துக்குப் பிறகும், ரஷ்யா உலக சுகாதார நிறுவனத்தினருடன் ஒத்துப்போக இப்போதும் மறுப்பு தெரிவித்தவாறே இருக்கிறது. 

அனைத்து நாடுகளும் தடுப்பூசி கண்டறியும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதை போலவே இந்தியாவும் தடுப்பூசி ஆய்வில் தீவிரமாகியுள்ளது. அதன் பலனாக, இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது. இதில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து, மூன்றாம் கட்ட  சோதனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், அரியானாவில் கோவேக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்று தொடங்கியது. இதில் முதல் தன்னார்வலராக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் (வயது 67) பங்கேற்று, தனது உடலில் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தினார். அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
 
மாநிலத்தில் நடைபெறும் மூன்றாம் கட்ட கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் முதல் தன்னார்வலராக நான் இருப்பேன் என அனில் விஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் நாடு முழுவதும் 26 ஆயிரம் பேர் வரை ஈடுபடுத்தப்படுவார்கள் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பரிசோதனையில், அனைத்து தரப்பு மக்களையும் கொண்டு சோதனை செய்யப்பட்ட பிறகு தடுப்பூசி பயனுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.