கொரோனாவை பரப்பியது சீனாதான் என்று உலகத்துக்குச் சொல்லும் விதமாக, அமெரிக்கா பல விஷயங்களை முன்னெடுத்து வருகின்றது. உலகத்திலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், அமெரிக்காதான் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வருகின்றது. இருப்பினும் அதிபர் ட்ரம்ப் தன்னுடைய அரசு சார்ந்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை அதிகப்படுத்துவது குறித்து எந்த விதத்திலும் முன்னெடுப்பு செய்வதாகத் தெரியவில்லை எனக்கூறி பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ட்ரம்ப், ``அமெரிக்கா தான் வெளிப்படைத்தன்மையோடு இருக்கிறது, அதனால்தான் இங்கு அதிக பாதிப்பு இருப்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது. அந்தவகையில் அமெரிக்காதான் கொரோனாவை சிறப்பாகச் செயல்படுகிறது" எனக்கூறிக் கொண்டு இருக்கின்றார்.

ட்ரம்ப், இப்போதைக்கு இரண்டு விஷயங்களில்தான் மிகவும் சிரத்தை எடுத்து கவனம் செலுத்துகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவை, `அமெரிக்கா சிறப்பாகச் செயல்படுகின்றது - அமெரிக்காவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது' என்பதும், `சீனாதான் கொரோனாவை பரப்பியது' என்பதும்! 

இதில் இரண்டாவது விஷயத்தை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க, ட்ரம்ப்பின் அரசாங்கம் அதிக சிரத்தை எடுத்து வருகின்றார். அதன் ஒருபகுதியாக `வூஹானில் இருக்கும் பரிசோதனைக் கூடத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் வெளியாகி இருக்கிறது என்ற உண்மையை மறைக்கச் சீனா முயல்கிறது. இந்த பரிசோதனைக் கூடத்தைச் சேர்ந்த நுண்ணுயிர் ஆய்வாளர்கள் தற்போது மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து சீனாவின் மீது வழக்குத் தொடர எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்' என்று அமெரிக்க அரசியல் ஆலோசகர் ஸ்டீவ் பன்னோன் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார்.

இவர், ட்ரம்ப் பதவிக்கு வருவதற்கு, பக்க பலமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் இந்த சீனா தொடர்பான செய்தியை அமெரிக்க செய்திநிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியில் தெரிவித்துள்ளார். அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ ஆதாரங்களை திரட்டும் பணியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஸ்டீவ் கூறியிருக்கிறார்.

எப்.பி.ஐ.யின் ஆதாரங்களின் ஒரு பகுதியாக, வூஹானிலிருக்கும் ஒரு பரிசோதனைக் கூடத்திலிருந்துதான் இந்த வைரஸ் வெளியாகி இருக்கிறது என்பதை அந்த ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளே தெரிவித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், கோவிட் - 19 கொரோனா பரவலை 'பயாலஜிக்கல் செர்னோபில்' என்று கூட அழைக்கலாம். காரணம், கோவிட் - 19 கொரோனா ஏற்படுத்தியிருக்கும் மனித அழிவுகள், அவ்வளவு மோசமானது.

என்னதான் அமெரிக்கா தன்மீது குற்றம் சொன்னாலும், சீனா எதையுமே ஏற்பதாக இல்லை. அமெரிக்காவும் விடுவதாக இல்லை. `சீனா உண்மைக்குப் புறம்பாக நடந்துகொள்கிறது. வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் 

கோவிட் - 19 கொரோனா வெளியானது என்பதைச் சீனா மறைக்கிறது. தற்போது ஆதாரங்கள் கிடைத்து இருப்பதால், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனாவின் மீது வழக்கு தொடர உள்ளது' என்கின்றனர் அரசியல் தலைவர்கள்.

இதற்கிடையில், அமெரிக்கா குற்றம் சுமத்தப் பரிசோதனைக் கூடத்தில் பணியாற்றியவர்கள் பிப்ரவரி மத்தியிலிருந்தே ஹாங்காங், சீனாவிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஏனெனில், உள்ளேயே இருந்து அந்த அரசின் மீது குரல் எழுப்பும் நபர்கள், தொடர்ச்சியாகக் காணாமல் போகும் சம்பவங்கள் அங்கே வாடிக்கையாகிவருகின்றன.

அமெரிக்க அரசியல் ஆலோசகர் ஸ்டீவ் பன்னோன் இதுபற்றி சொல்லும்போது, ``ஹூபே மாகாணத்திலிருந்து வைரஸ் தொற்று வெளியாகி இருப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்திடம் தைவான் டிசம்பர் 31ஆம் தேதி தெரிவித்துள்ளது. இத்துடன் பீஜிங்கில் இருக்கும் தொற்று நோய்த் தடுப்பு மையத்திடமும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் மறைத்துத்தான் ஜனவரி 15ஆம் தேதி அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைச் சீனா மேற்கொண்டுள்ளது. சீனா இதுகுறித்து டிசம்பர் இறுதியில் தெரிவித்து இருந்தால், அப்போது கட்டுப்படுத்தி இருக்கலாம். 95 சதவீத உயிரிழப்பைத் தடுத்து இருக்கலாம். பொருளாதார இழப்பும் உலக அளவில் இந்தளவிற்கு ஏற்பட்டு இருக்காது'' என்று கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஹாங்காங்கில் இருந்து அமெரிக்காவுக்குத் தப்பிய நுண்ணுயிர் ஆய்வாளரும், மருத்துவருமான லி மெங் யான், தனது சொந்த அனுபவத்தை வெளியிட்டு இருந்தார். கொரோனா வைரஸ் தொற்று குறித்து நீண்ட நாட்களுக்கு முன்னரே சீனா அறிந்து இருந்தது என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இப்படி தஞ்சம் புகும் ஒவ்வொருவரும், தங்களின் பயத்தை அந்தந்த அரசாங்கத்திடம் கூறிவருகிறார்கள். அனைத்தையும் எப்.பி.ஐ. சேகரித்து வருவதாகத் தெரிகிறது. விரைவிலேயே அது வெளிவரலாம் என்றும், அப்படி வந்தால் சீனா மீது உலக நாடுகளின் நிலைப்பாடு மாறி, உலக அரசியலே ஆட்டம் காணும் என்றும் கணிக்கப்படுகிறது.

 

- ஜெ.நிவேதா