கொரோனா பரவலானது, இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதுவரை 1 மில்லியனை கடந்த கொரோனா பாதிப்பில், தீவிரமா பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில், நான்காவது இடத்தில் இருக்கிறது கர்நாடகா. கொரோனா பிடியை, கையாள தெரியாமல், கர்நாடகாவே திணறிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, இருதினங்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛இன்னும் இரு மாதங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் இன்னும் அதிகரிக்கும். நம்மை யார் காப்பாற்றுவது எனத் தெரியவில்லை. இனி கடவுள்தான் நம்மைக் காக்க வேண்டும்' எனப் பதிவிட்டிருந்தார். 

இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசிய விஷயங்களில், ``உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், இந்த வைரஸ் பாகுபாடு காட்டாது. அடுத்த இரண்டு மாதங்களில் மட்டுமே கொரோனா பாதிப்புகள் உயரும் என நான் நம்புகிறேன். கொரோனாவில் இருந்து கடவுளால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்" எனச் சொல்லியிருந்தார்.

மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சரேவும், கொரோனா விஷயத்தில் இப்படிப் பேசியிருப்பது, அம்மாநில மக்களிடையே மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது.

பெருநகரங்களில் சிறப்பாகச் செயல்படுவதாகச் சொல்லப்பட்டுள்ள பெங்களூருவில்கூட, பாதிப்பு கட்டுக்குள் வராததைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூன் 17 மாலை கணக்குப்படி, கர்நாடகாவில் இதுவரை 1,032 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், 51,422 என உயர்ந்திருக்கிறது.

எப்படியாவது கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என அம்மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் ஈடுபட்டுவருகின்றார்கள். இந்த மாதிரியான இக்கட்டான நேரத்தில், அம்மாநில காங்கிரஸைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர், `மது அருந்தினால், கொரோனா குணமாகும்' எனக் கையில் ரம் பாட்டிலோடு அமர்ந்தபடி காணொளி வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

கர்நாடகாவின் உல்லால் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் ரவிச்சந்த்ரா என்பவர்தான், இந்த சர்ச்சை நாயகன். இவர் தன்னுடைய அந்த வீடியோவில், ``முட்டையை வறுத்துச் சாப்பிட்டுக் கொண்டு, அதோடு கொஞ்சம் ரம்மை குடித்து வந்தால், உடலிலிருந்து கொரோனா வைரஸ் முழுவதுமாக அழிஞ்சிடும்" என அழுத்தமாகக் கூறியிருக்கிறார். 

இதை ரெசிபி வீடியோ போல பேசியிருக்கும் ரவிச்சந்திரா, ``ஒரு டீச்பூண் மிளகுப்பொடியை, 90 ML ரம்மில் சேர்த்து, கை விரல்களால் அதை நன்கு கலந்துவிட்டு குடிங்க. கூடவே, அரைவேக்காடா வறுக்கப்பட்ட ரெண்டு முட்டைகளை சாப்பிடுங்க. இப்படி செஞ்சா, கொரோனா வைரஸ் நிச்சயம் உடலிலிருந்து அழிஞ்சிடும். நானே அதற்கு சாட்சி. நான் நிறைய கொரோனா மருந்தை சாப்பிட்டுப் பார்த்தேன். எதிலேயுமே கொரோனா அழியல. இதுலதான் அழிஞ்சுது. இந்தத் தகவலையெல்லாம், கட்சிக்காரனா நான் உங்ககிட்ட சொல்லல. கொரோனா கமிட்டியில உள்ள ஒரு உறுப்பினரா சொல்றேன். எல்லாரும் இதை செய்ங்க" என சொல்லியிருக்கிறார்.

தன்னுடைய இந்த பதிவையெல்லாம், கையில் ஒரு ரம் பாட்டிலுடன் ஒரு நிமிடத்துக்கு மேற்பட்ட வீடியோவாக பேசி பதிவு செய்திருக்கிறார் ரவிச்சந்திரா. அந்த வீடியோ, இப்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது.

உலக சுகாதார நிறுவனமேவும், `மது அருந்துவது ஒருவரின் நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும். அதனால் கொரோனா பரவும் இந்த நேரத்தில் யாரும் மது அருந்தாதீர்கள்' என அறிவுறுத்தியிருக்கும் இந்த நேரத்தில், இவ்வளவு பொறுப்பின்மையுடன் ஒரு மக்கள் பிரதிநிதி பேசுவது, குற்றம் எனப் பலரும் கருத்து வருகின்றனர்.

சுகாதாரத் துறை அமைச்சரின் `கடவுள்தான் காப்பத்தணும்' என்ற வார்த்தைக்கு எதிராகக் குரல் கொடுத்த கர்நாடக காங்கிரஸ் கட்சிக்காரர்கள், இப்போது என்ன செய்யப்போகின்றனர் என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.  இன்னொருபக்கம் தவறான கருத்தைக் கொண்டிருக்கும் காரணத்தால், முடிந்தவரை இந்த வீடியோ யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என மருத்துவ வல்லுநர்களால் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது!

- பெ.மதலை ஆரோன்.