உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோன வைரசுக்கு இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்தும் இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனாவுக்கான தடுப்பூசி பணிகளும் உலகம் தோறும் ஆய்வு நிலையில் இருக்கிறது. ரஷ்யா, தடுப்பூசியை தான் கண்டறிந்துவிட்டதாக சொல்லியிருந்தாலும், அதன் நம்பகத்தன்மை இன்னமும் சர்ச்சைக்குட்பட்டே இருக்கிறது.

இதுபோன்ற காரணங்களினால், நோய் தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு கையை கழுவுவது போன்றவற்றை பொதுமக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சீனாவின் வூஹான் நகரில் கடந்த 75 நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்,  அங்குள்ள மாயா பீச் வாட்டர் தீம் பார்க்  கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதில் உள்ள மிகப்பெரிய நீச்சல் குளத்தில்,  எந்தவித தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்காமல், ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி உற்சாக குளியல் போட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கி இருப்பதால், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக  சீனா அண்மையில் தெரிவித்திருந்தது. இதுவரை 70 ஆயிரம் பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 4,500 பேர் மரணமடைந்தனர் என்றும் சீனா தெரிவித்திருந்தது.

ஆனால் சீனாவின் இந்த எண்ணிக்கை உண்மையாக இருக்க வாய்ப்பில்லை எனக்கூறி பலரும் சீனாவுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். இதற்கிடையில்தான் கொரோனா வேகமாக ஐரோப்பாவிற்கு பரவியது. பின் அமெரிக்காவில் தீவிரமடைந்தது. மெல்லமெல்ல இந்தியா உள்ளிட்ட மற்ற ஆசிய நாடுகளுக்கும் பரவியது. இதனை அடுத்து உலகில் மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவரே இல்லை எனலாம்.

நியூசிலாந்து போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர கொரோனா தாக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்ட நாடு என்று ஒன்று இல்லவே இல்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. நியூசிலாந்திலுமே கூட, ஒற்றை இலக்கில் கொரோனா பாசிடிவ் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்நிலையில் சீனாவில் படிப்படியாக கொரோனாவின் வீரியம் குறைந்து வந்ததாக கூறிக்கொண்டிருந்த சீன அரசு. அங்கு திரையரங்குகள் திறக்க அனுமதி தந்தன. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சமூக இடைவெளிவிட்டு மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளத் துவங்கினார். தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு வூஹான் திரும்பி வருகிறது. அப்படித்தான் வூஹான் நகரில் மாயா பீச் வாட்டர் பார்க்  திறக்கப்பட்டது.

இங்கு பலர் வருகை புரிந்து தண்ணீரில் சாகசங்கள் செய்யும் கலைஞர்களின் நிகழ்ச்சியை கண்டுகளித்து உள்ளனர். இவர்களில் யாருமே மாஸ்க் அணியவில்லை என்பதுதான் தற்போதைய சர்ச்சை. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

உலகத்திற்கு கொரோனாவை கொடுத்துவிட்டு தற்போது வூஹான் நகர மக்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என சமூக வலைதளங்களில் கொதித்து வருகின்றனர்.

மற்றொரு பக்கம், இது கொரோனா பார்ட்டியா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. கொரோனா பார்ட்டி என்பது, கொரோனா நெகடிவ் என உள்ளவர்கள் - கொரோனா பாசிடிவ் நோயாளிகளோடு இணைந்து, தானும் பாசிடிவாகி பின் நோய்க்கு சிகிச்சை எடுப்பது. பொதுவாக `குறிப்பிட்ட அந்த நோய் ஒருமுறை உடலில் வந்துவிட்டால், பின் அது வராது' என்றிருக்கும் வியாதிகளுக்குத்தான் இப்படியான பார்ட்டியெல்லாம் மருத்துவத்துறையில் பரிந்துரைக்கப்படும். கொரோனாவுக்கு அப்படியெல்லாம் கிடையாது. ஒருவருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கொரோனா வரலாம். அதனால் `கொரோனாவில் பார்ட்டி என்பது, ஆபத்தில் தான் முடியும்' என உலக சுகாதார நிறுவனமேவும் எச்சரித்துள்ளது. அவற்றையெல்லாம் மீறி சீனா இப்படியொரு விஷயத்தை செய்திருப்பது, சமூக தள வாசிகள் மட்டுமன்றி பலருக்கும் அதிருப்தியையும் அச்சத்தையும் கொடுத்துள்ளது.