உலகம் முழுவதும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாடுவதால் கொரோனா தொற்று அதிகம் பரவும் என்றும், கொரோனாவைக் கட்டுப்படுத்த பாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

இதற்கான விளக்கமாக, ஆய்வாளர்கள் தரப்பில், ``பாடும் போது பாடுபவரின் வாயில் இருந்து அதிகமான உமிழ்நீர் திவளைகள் காற்றில் வேகமாக பரவுகிறது. அதனால் கொரோனா தொற்றுப் பரவும் அபாயம் அதிகரிக்கிறது" எனக்கூறப்பட்டுள்ளது.

ஸ்வீனில் உள்ள லுண்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், பொதுவாக நாம் பேசும்பொழுதை விடவும், பாடும்பொழுது வாயில் இருந்து அதிக உமிர்நீர் திவளைகள் காற்றில் வேகமாகப் பரவுவதாகவும், அதனால் கொரோனா தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடுவதற்கும் கொரோனா தொற்றுப் பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு, ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், பல நாடுகளில் பாதுகாப்பாக பாடுவதற்கான அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, பாடும் போது வெளிப்படும் உமிர்நீர் திவளைகள் குறித்து அறிவியல்பூர்வமான கணக்கு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர் ஜாகோப் கூறியுள்ளார்.

ஏரோசோல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மருத்துவ இதழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையில், பூரண உடல் நலத்துடன் இருந்த 12 பாடகர்களும் மேலும் இரண்டு பேரும் இந்த ஆராய்ச்சியின் போது கொரோனா தொற்றுக்கு உள்ளானதாகவும்,  பாடும் போது பாடுபவரின் வாயில் இருந்து வரும் மிகப்பெரிய உமிர்நீர் திவளைகள் சில அடி தூரங்கள் வரை காற்றில் மிதந்து செல்வதாகவும், சிறிய உமிழ்நீர் திவளைகள் சில நிமிடங்களுக்கு காற்றில் மிதப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த நபர் பாடுவதால், அவர் மூலமாக அருகில் இருக்கும் பலருக்கும் கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் இருப்பதாகவும், இது இடத்துக்கு இடம், நபருக்கு நபர் மாறுபடுவதாகவும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

மிக சத்தமாகவும், அதிக அழுத்தமான வார்த்தைகளைக் கொண்ட பாடலாகவும் இருப்பின், கொரோனா தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்றும், சில குறிப்பிட்ட வார்த்தைகள், உதாரணமாக 'பி' போன்ற எழுத்துகளை பாடகர்கள் உச்சரிக்கும் போது அதிக உமிழ்நீர் வெளிப்படுவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மிகச் சிறு திவளைகளைக் கூட காணும் வகையில், அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள், அதிக வேகத்தில் படமெடுக்கும் புகைப்படக் கருவிகள் உள்ளிட்டவை இந்த ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம், பாட்டு பாடுவதென்பது பேசுவதை விட வேகமாக கொரோனாவை பரப்பும் என்பது உறுதியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகள் தயாரிக்கும் பணி ஒரு புறம் சூடு பிடிக்க தொற்றைப் பரவால் தடுக்க பல்வேறு நாடுகளும் புதுப்புது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் பாடுவதால் கொரோனா தொற்று அதிகம் பரவும் என்றும், கொரோனாவைக் கட்டுப்படுத்த பாட்டு பாடுவதை முடிந்தவரையில் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பாடுவதை விட மிக முக்கியமான கொரோனா தடுப்புக்கான வழிகளாக, மாஸ்க் அணிவதும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும்தான் முக்கியமான வழிகளாக சொல்லப்படுகின்றன.