கொரோனா வைரஸின் பிறப்பிடம் என கருதப்படும் சீனாவில் அந்த வைரஸை தடுக்க உருவாக்கப்பட்ட தடுப்பூசிக்கான முதல் காப்புரிமையை சீன அரசு தற்போது அளித்திருக்கிறது. இதுபற்றி சீன அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான `தி பீப்பில்ஸ் டெய்லி' என்ற பத்திரிகையில் செய்த் வெளியாகியுள்ளன.

சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல், இன்று இந்தியா உட்பட உலகத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் உலகம் முழுதும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பல்வேறு முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. 

கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பரிசோதனை முயற்சியில் மற்ற நாடுகளை போல சீனாவும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. சீனாவின் ராணுவ மருத்துவ அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் மனிதர்களுக்கு தடுப்பு மருந்தைச் செலுத்தி தடுப்பூசியைக் கண்டறிய ஒப்புதல் பெற்றுள்ளனர். ராணுவ மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த கான்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனம் இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சீனாவின் தடுப்பூசிகள் தயாரிப்பதில் புகழ் பெற்ற நிறுவனமான கான்சினோ பயாலஜிக்ஸ் இன்க் நிறுவனத்துக்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் அங்கீகாரத்தை சீன அரசு கொடுத்திருக்கிறது என்று பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சீன அரசால் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்காக முதலில் அளிக்கப்படும் காப்புரிமை இதுதான் என்று ஆகஸ்டு 16 ஆம் தேதி வெளியான அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
ஆகஸ்ட் 11 ம் தேதி இந்தக் காப்புரிமை வழங்கப்பட்டதாக சீனாவின் தேசிய அறிவுசார் சொத்து நிர்வாகம் வெளியிட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதே ஆகஸ்டு 11 ஆம் தேதிதான் ரஷ்ய அதிபர் புதின் கொரோனா வைரஸுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசி, ஸ்புட்னிக் வி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 18ம் தேதி CanSino Biologics நிறுவனம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட சோதணையில் இம்மருந்து நல்ல முடிவுகளை அளித்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட சோதனை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மேலும் கன்சினோ நிறுவனம் சவுதி அரேபியாவில் இந்த மாதம் கன்சினோ தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியது. மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்க ரஷ்யா, பிரேசில் மற்றும் சிலி ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கன்சினோ தெரிவித்தது.

கொரோனா தடுப்பூசிக்கான சீனாவின் அதிகார பூர்வ காப்புரிமையை பெற்றதால் கன்சினோ நிறுவனத்தின் பங்குகள் வேகவேகமாக உயர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, திங்கள்கிழமை காலை கான்சினோவின் ஹாங்காங் பங்குகள் சுமார் 14 சதவீதம் உயர்ந்தன. அதன் ஷாங்காய் பங்குகள் மதியம் வரை 6.6 சதவீதம் உயர்ந்தன.

இதற்கிடையில் ரஷ்ய விஞ்ஞானிகள் தங்களுடைய தடுப்பூசிக்கான விற்பனையை தொடங்கிவிட்டனர். ஆனால், அவா்கள் தயாரித்துள்ள மருந்து முதல் கட்ட சோதனையை மட்டுமே தாண்டியிருக்கலாம் என்று நிபுணா்கள் கருத்து கூறி வருகிறார்கள். குறிப்பாக, ரஷ்யா்கள் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்து அபார சக்தி படைத்ததாகவே இருந்தாலும், அது மனிதா்களுக்கு பாதுகாப்பானது என்றோ, கொரோனாவிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் என்றோ உடனடியாக முடிவுக்கு வர முடியாது என்று அவா்கள் கூறியிருந்தனா். பல சர்ச்சைகளுக்கு மத்தியில்தான், தாங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்காகத் தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதிபா் புதின் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினாா்.

அந்தத் தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய கமாலேயா ஆய்வு மையம் மற்றும் பின்னோஃபாா்ம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் மிகயீல் முராஷ்கோ தெரிவித்தாா்.

இப்படி தடுப்பூசி கண்டுபிடிப்பு, ஒவ்வொரு நாட்டிலும் அடுத்தடுத்த நிலை முன்னேற்றங்களை சந்தித்து வருகிறது