தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து, இன்று காலை முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடத் தொடங்கின. தமிழக முதல்வர் பல்வேறு தினங்களில் நடந்த ஆய்வு அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ குழுவினர் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் ஊரடங்கு  நீட்டிப்பு  என அறிவித்தார்.

இந்நிலையில், இன்று  ஐந்து மாதத்திற்கு பிறகு மாவட்டத்திற்குள்ளான பேருந்து  சேவை தொடங்கியுள்ளது. மேலும், சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கியது.

முதல்கட்டமாக 20 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது. படிப்படியாக மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளிலும் 50 சதவீத பயணிகளே அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், பேருந்துகளிலும் போதிய அளவுக்கு மக்கள் கூட்டம் இருக்கவில்லை.

முதல்நாள் என்பதால் கூட்டம் குறைவாக இருக்கலாம், நாள் செல்லச் செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து சேவை சுமார் 160 நாள்களுக்குப் பின் இன்று காலை தொடங்கியது. முதல் நாள் என்பதால் பரவலாக அனைத்து பேருந்து நிலையங்களிலும் அதிகக் கூட்டத்தைக் காண முடியவில்லை.

தமிழகத்தில், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சுமாா் 19 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 மாதங்களுக்கு முன் கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட போதிலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில், ஒருசேர தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதியளித்து, முதல்வா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்ததாா்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பேருந்துகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பேட்டரிகள், எரிபொருள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டு, பேருந்துகள் இயக்க தயாா் நிலையில் வைக்கப்பட்டன.

பொது முடக்கத்துக்கு முன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ், சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது, மாவட்டம் விட்டு மாவட்டத்துக்குப் பேருந்துகளை இயக்க அனுமதி இல்லாததால், விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்காது. ஏற்கெனவே அறிவித்தபடி, ஒப்பந்த அடிப்படையில், தனியாா் நிறுவனப் பணியாளா்களுக்குப் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படும்.

அனைத்துப் பேருந்துகளிலும் 50 சதவீதப் பயணிகளே அனுமதிக்கப்பட்ட போதிலும், பயணக் கட்டணத்தில் எந்த வித மாற்றமுமில்லை. எனவே, அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.