குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை அந்த மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை ஏற்பட்ட அந்த தீ விபத்தில், இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவர்.

அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள ஐசியு வார்டில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. மற்ற நோயாளிகளை உடனடியாக போலீஸார், தீயணைப்பு வீரர்களும் வேறு மருத்துவமனைக்கு மாற்றினர்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட அகமதாபாத் நகர உதவி ஆணையர் எஸ்பி ஸலா, விபத்து பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். தீ கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறியுள்ளளார்.

இது குறித்து குஜராத் அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் குமார் குப்தா, ``தீ விபத்து ஏற்பட்ட தனியார் மருத்துவமனைக்கு  சீல் வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. உரிய விசாரணைக்கு பிறகே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும். மருத்துவமனை அறக்கட்டளையை சேர்ந்தவர்களிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறியிருக்கிறார்.

மேலும், மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த கூடுதல் தலைமை செயலாளர் சங்கீதா சிங்கை நியமித்து குஜராத் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மூன்று நாட்களுக்குள் விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், குஜராத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், அகமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெறவேண்டும். மீட்புப் பணிகள் குறித்து முதல் மந்திரி விஜய் ரூபானியிடம் பேசியுள்ளேன் என பதிவிட்டுள்ளார்

விபத்து ஏற்பட்டவுடன், தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைத் துறை அந்த இடத்துக்கு உடனே விரைந்தது. தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் வாகனம், ஹைட்ராலிக் பம்புகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டிருக்கிறது.

இந்த தீயணைப்பு நடவடிக்கையின் போது அவசர சிகிச்சைப் பிரிவில் மாட்டிக்கொண்ட சுமார் 40 நோயாளிகளை தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைந்து சென்று காப்பாற்றினர். காப்பாற்றப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனையான சர்தார் வல்லபாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தப் பணியில் ஈடுபட்ட 35 முதல் 40 தீயணைப்பு வீரர்கள், அதிகாரிகள் அனைவரும் கொரோனா அச்சம் காரணமாக தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முதன்மை தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் பட் தெரிவிதிருந்த தகவலின் படி, இந்த விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இது உண்மையாகும்பட்சத்தில், மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்றாகும். இதை அடிப்படையாக வைத்து, மருத்துவமனை மீதுதான் தவறு என்ற அடிப்படையில் போலீசார், மருத்துவமனை இயக்குநர் பாரத் மகந்த் என்பவரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தூர்தர்ஷன் செய்தி வெளியிட்டுள்ளது.