கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வரும் நேரத்திலும், இன்னமும் முழுமையான நேரடி மருந்து கொரோனாவுக்கு கண்டறியப்படாமல்தான் இருக்கிறது. நேரடி மருந்து இல்லாததால், இணை மருத்துவம் செய்யப்படுகிறது. அப்படியானவைதான் பிளாஸ்மா சிகிச்சை, சித்த - ஆயுர்வேத மருத்துவ முறைகள், வென்டிலேட்டர் உதவியோடு கூடிய சிகிச்சைகள் போன்றவையெல்லாம். 

இவற்றில் பிளாஸ்மா தெரபி என்பது, கொரோனாவிலிருந்து மீண்டவர் உடலில் இருக்கும் ரத்தத்திலிருந்து பிரிக்கப்படும் பிளாஸ்மா மூலம் மேற்கொள்ளப்படும் ஒருவகை சிகிச்சை. இதன்படி, கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களிடம் இருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். தமிழகத்தில், பிளாஸ்மா தானம் அளிக்க, குணமாவோர் பலரும் முன்வர வேண்டும் என சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலேவும் பரிந்துரை செய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்கள் பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்த தொடங்கியுள்ளன. பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட பல்வேறு நபர்கள் குணமடைந்தும் வருவதால், இது மிகவும் பாதுகாப்பான முறையாக பார்க்கப்படுகிறது.

எனினும், கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்தலாம் என்பதற்கு உறுதியான, நிலையான ஆதாரம் இல்லை. இது தொடர்பான ஆராச்சியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. எனவே, ஐ.சி.எம்.ஆர். தனது ஆய்வை முடிக்கும் வரை பிளாஸ்மா சிகிச்சையை ஆராய்ச்சி அல்லது சோதனை நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் இன்று அறிவித்துள்ளார். ஊக்கத் தொகை வழங்கும் இந்த முடிவு அம்மாநிலத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மாவை தானமாக அளித்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக பிளாஸ்மா தானத்தை ஊக்கப்படும் வகையில் தற்போது ஆந்திர அரசும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாள்களாகவே ஆந்திராவில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருந்துவருகின்றனர். கடந்த இரு தினங்களாக, ஒவ்வொரு நாளும் 10,000 புதிய நோயாளிகள் உறுதிசெய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இறப்பும் அதிகமாக இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஆந்திராவில் 10,167 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆந்திராவில் மொத்தம் 1,30,557 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 69,252 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 60,024 பேர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,281 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 68 கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு கோதாவரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,441 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிழக்கு கோதாவரியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,180ஆக அதிகரித்துள்ளது. மேற்கு கோதாவரியில் கடந்த 24 மணி நேரத்தில் 998 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேற்கு கோதாவரியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,354ஆக உயர்ந்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் 1,223 பேரும், அனந்தப்பூரில் 954 பேரும், சித்தூர் 509, குண்டூர் 946, கடப்பா 753, கிருஷ்ணா 271, குர்நூல் 1,252, நெல்லூர் 702, பிரகாசம் 318, ஸ்ரீகாகுளம் 586, விழிணகரம் 214 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இதுவரை 18,90,077 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1,30,557 மாதிரிகள் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுவோரின் விகிதம் 6.91 சதவீதமாக உள்ளது.

இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்த்து, ஆந்திராவில் பாதிப்பை குறைக்க சிகிச்சைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் இந்த பிளாஸ்மா சிகிச்சைக்கான ஊக்கத்தொகையும் பார்க்கப்படுகிறது.