பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை, பெண் ஒருவர் நடுரோட்டில் இறக்கி அடி புரட்டி எடுத்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமாரம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண், கடந்த 29 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அங்குள்ள வெங்கப்பள்ளி நோக்கி செல்லும் பேருந்தில் பயணித்து உள்ளார்.

அப்போது, அங்குள்ள படிஞ்சராதரா என்ற பேருந்து நிறுத்தத்தில் கடும் மது போதையில் பூவாழன் என்ற நபர், அந்த பேருந்தில் ஏறி உள்ளார்.

கடும் மது போதையில் இருந்த பூவாழன், சிறிதும் நிதானம் இல்லாமல் அந்த பேருந்தில் ஏறியதும் சந்தியா அமர்ந்திருந்த இருக்கையில் பக்கத்தில் வந்து அமர்ந்து உள்ளார்.

அப்போது, அந்த பேருந்து சென்றுகொண்டிருந்த அடுத்த சிறிது நேரத்திலேயே, அந்த பெண் சந்தியாவுக்கு மதுபோதையில் இருந்த அந்த பூவாழன் அத்து மீறி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அந்த பெண், “அந்த பேருந்தில் காலியாக இருந்த வேறு ஒரு இருக்கையில் சென்று அமரும்படி” அந்த நபரிடம் கூறியிருக்கிறார். 

ஆனால், இதனை கேட்காத அந்த நபர், தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து செல்லாமல், அப்படியே அமர்ந்திருந்த நிலையில், சிறிது நேர இடைவெளியில் அந்த பெண் சந்தியாவுக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இதனை கவனித்த அந்த பேருந்தில் இருந்த மற்றொரு பெண் பயணி, இது குறித்து பேருந்தின் நடத்துனரிடம் முறையிட்டு உள்ளார். 

இதனையடுத்து, அந்த குடிகாரரிடம் சக பயணிகள் மற்றும் அந்த நடத்துனர் அனைவரும் சேர்ந்து, “நீ போய் வேறு இருக்கையில் அமரும்படி” கூறியுள்ளனர். 

இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த குடிகாரர், “அங்கேயே எல்லோர் முன்பும் எழுந்து சந்தியாவை கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு அந்த பேருந்தில் இருந்து கீழே இறங்கியதுடன், அந்த பேருந்தின் முன் பக்கம் வந்து நின்று அந்த பேருந்து நகராதவாறு தகராறு செய்து உள்ளார். 

இதனையடுத்து, மீண்டும் அந்த பேருந்திற்குள் வந்த அந்த நபர், அந்த பெண் சந்தியாவின் கன்னத்தில் அடித்து உள்ளார். 

இதனால், இன்னும் அதிர்ச்சி அடைந்த சந்தியா, பொங்கி எழுந்து அந்த குடிகார நபரை பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு உள்ளார். இதில், அந்த நபர் நிதானம் இல்லாமல் ரோட்டில் வந்து விழுந்து உள்ளார். 

இதனையடுத்து, அந்த பெண்ணும் பேருந்தை விட்டு கீழே இறங்கிய நிலையில், அந்த குடிகார நபரை நடுரோட்டில் வைத்து அடி வெளுத்து வாங்கி உள்ளார்.

அதுவும், கடும் மது போதையில் பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபரை, சந்தியா நடுரோட்டில் அடித்து துவைத்ததை, அனைவரும் வேடிக்கைப் பார்த்த நிலையில், பலரும் இதனை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

இதனையடுத்து, இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

அத்துடன், போதை ஆசாமிடம் துணிச்சலாக செயல்பட்ட அந்த பெண்ணிற்கு பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.