“என் தங்கச்சியும் உனக்கு வேண்டும், என் மனைவியும் உனக்கு வேண்டுமா?” என்று, மாமனை ஓட ஓட விரட்டி வெட்டிய மச்சானை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி தேவதானத்தை சேர்ந்த 43 வயதான சந்துரு, லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். 

அதே போல், அங்குள்ள திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்த 45 வயதான சிவக்குமார், சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். 

இப்படியான சூழலில் தான், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிவக்குமார், சந்துருவின் தங்கை விஜயலட்சுமியை காதலித்து அவரை கலப்பு திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இந்த நிலையில் தான், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி உயிரிழந்த நிலையில், அவரது மகளும் உடல்நலக் குறைவால் அதன் பிறகு உயிரிழந்தாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தான், மைத்துனர் முறை கொண்ட சிவக்குமார், தங்கை முறை கொண்ட சந்துருவின் மனைவி சத்யாவுடன் தவறான கள்ளத் தொடர்பை, ஏற்படுத்திக்கொண்டு, அவருடன் நெருங்கிப் பழகி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த விசயம் கணவன் சந்துருவுக்கு தெரிய வந்த நிலையில் கடும் அதிர்ச்சியடைந்த அவர், இதைக் கண்டித்து உள்ளார். 

ஆனால், இதனை கேட்காத அவரது மனைவி சத்யா, தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி, தற்போது சிவக்குமாருடன் சேர்ந்து தனியாக குடும்பம் நடத்தி வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விசயம், சந்துருவுக்கு தெரிய வந்த நிலையில், கடும் ஆத்திரமடைந்த சந்துரு, இன்று காலை வீட்டில் உள்ள ஒரு பெரிய அரிவாளை கையோடு எடுத்து வந்து, அங்குள்ள திருவானைக்காவல் ரயில்வே மேம்பாலத்தில் சிவக்குமாரை ஓட ஓட  விரட்டி விரட்டி அவரை வெட்டி தள்ளி உள்ளார். 

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த போலீஸ் ஏட்டு ராஜாமணி, உடனடியாக சந்துருவை அரிவாளுடன் மடக்கி பிடித்து, அவரை கைது செய்து உள்ளார். 

அத்துடன், இந்த அரிவாள் வெட்டால் படுகாயமடைந்த சிவக்குமாரை மீட்ட அந்த போலீஸ் ஏட்டு, அருகில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் சேர்த்தார்.

இதனையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.