விக்னேஷின் உடலில் 13 காயங்கள் - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!

விக்னேஷின் உடலில் 13 காயங்கள் - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்! - Daily news

சென்னையில்  மர்மமான முறையில்  உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷின்  உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்தது  பிரேத பரிசோதனை முடிவில்  தெரியவந்துள்ளது.  

சமீப காலங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்கள் காவல் நிலையத்தில் இறப்பது குறித்தும் அவர்கள் இறப்பில் அவ்வப்போது சந்தேகம் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. சந்தேகத்தின் பேரில் அழைத்து செல்லும் நபர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு மரணடைகினற்னர்.

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சென்னை விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் இது குறித்து பேசிய போது, " சென்னை மாநகர காவல்துறை மேற்கொள்ளும் வழக்கமான வாகன பரிசோதனையின்போது பட்டினபாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி உள்ளனர்.  

அதனைதொடர்ந்து கஞ்சா போதையில் இருந்த அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  முறையான பதில் அவர்கள் அளிக்கவில்லை என்றும், வாகனத்தையும் அவர்களையும் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்த போது விக்னேஷ் செல்ல மறுத்துள்ளார்.  இதையடுத்து அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல்துறையினரை தாக்க முயற்சித்துள்ளார். இதை சமாளித்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சுரேஷ் மீது கொலை உட்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சுரேஷ்  மீது 2 வழக்குகள் இருப்பது அப்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி இருவருக்கும் உணவு அளித்துள்ளனர். காலை உணவிற்கு பிறகு விக்னேஷுக்கு வாந்தி , வலிப்பு வந்துள்ளது.  தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  சந்தேக மரணம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது . உதவி ஆய்வாளர் ,காவலர், ஊர்காவல் படையை சேர்ந்த 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு கடைக்கோடி மனிதனுக்கும் மனித உரிமை காக்கப்பட்டு உரிய நீதி கிடைக்க அரசு துணை நிற்கும்.

மேலும் பேசியவர் காவல்நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் . காயமடைந்த சுரேஷின் சிகிச்சை செலவுகளை அரசே ஏற்கும் . ஆட்சியில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்" என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் காவல்நிலையத்திலிருந்து தப்பி ஓட முயல்வது போலவும், அவரை போலீஸார் விரட்டிப் பிடிப்பது போலவும்  சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. உயிரிழந்த விக்னேஷின்  பிரேத பரிசோதனை  அறிக்கை  தற்போது வெளியாகியுள்ளது. அதில், விக்னேஷின் உடலில் தலை, கண்புருவம், இடது கை, தாடை உள்ளிட்ட 13 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், அவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், ரத்தக்கட்டு காணப்படுவதாகவும், லத்தியால் தாக்கிய அடையாளங்கள் உடலில் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.
 

Leave a Comment