வரதட்சணை என்ற பெயரில் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் மற்றும் எல்லை மீறி நடந்துகொண்ட மச்சினன் ஆகியோரால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

சென்னை தாம்பரம் பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை தாம்பரம் அடுத்து உள்ள படப்பையை சேர்ந்த 27 வயதான இளம் பெண் ஜெயஸ்ரீ என்பவருக்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று, சென்னையை அடுத்த நாவலூரை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞன் உடன் இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடந்து உள்ளது.

இந்த திருமணத்தின் போது, பெண் வீட்டார் சார்பில் கல்யாண பெண்ணுக்கு 40 சவரன் தங்க நகைகள், பாத்திரங்கள் மற்றும் சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசைகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், திருமணம் ஆன அடுத்த சில மாதங்களிலேயே புது மணப்பெண் ஜெயஸ்ரீயிடம் “இன்னும் கூடுதலாக வரதட்சணை வேண்டும்” என்று, மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் தொடர்ந்து டார்ச்சர் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மிக முக்கியமாக, “மாமியார் சாந்தகுமாரி, மாமனார் நடராஜன், கணவரின் சகோதரன் ராஜேஷ் ஆகியோர்கள் இன்னும் பணம் மற்றும் கார் வாங்கி வருமாறும்தொடர்ந்து டார்ச்சர்” செய்து வருவதாகவும், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்த குற்றச்சாட்டு ஒரு பக்கம் சென்றுக்கொண்டிருந்த நிலையில், மற்றொரு புறம், மருமகள் மீதான இந்த வரதட்சணை ஒரு கட்டத்தில் பாலியல் கொடுமையாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, அந்த மருகளின் மாமனார் நடராஜன், கணவரின் சகோதரன் ராஜேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து 27 வயதான ஜெயஸ்ரீக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஆனால், மாமனார் மற்றும் மச்சினன் ஆகியோரின் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து அந்த பெண், தனது கணவனிடம் கூறியதாகவும், ஆனால் அந்த கணவன் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்தாகவும், பாதிக்கப்பட்ட அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “தனது கணவரும் அவரின் பெற்றோர் பேச்சை கேட்டு, வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தார்” என்றும், பாதிக்கப்பட்ட அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

இப்படியாக, தினமும் கணவர் வீட்டாரின் வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் கொடுமைகள் அதிகரிக்கவே கணவன் வீட்டில் இருந்து தப்பித்து தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்த அந்த பெண், தனது பெற்றோரிடம் தனக்கு நேரும் கொடுமைகள் பற்றி கண்ணீர் மல்க கூறி உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், அங்குள்ள தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளனர்.

இளம் பெண் ஜெயஸ்ரீயின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து, ஜெயஸ்ரீயின் மாமனார் நடராஜனை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். 

குறிப்பாக, மாமனர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தலைமறைவாக உள்ள நடராஜனின் மகன்கள் மற்றும் மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இச்சம்பவம், தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.