கணவன் -மனைவிக்கு இடையேயான பிரச்சனையில் மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் மாமனார் வீட்டை தீ வைத்து எரித்து உள்ளார் மருமகன்.

சேலம் வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த சங்கர் லாரி ஓட்டுநராக இருந்து வருகிறார். இவருக்கு திலகம் என்ற மகள் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கிறார் திலகம்.

திருமணத்திற்குப் பின்னர் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுயிருக்கிறது .   இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்கிறார் திலகம்.  இதனால் மாமனார் வீட்டிற்கு அடிக்கடி தன் மனைவியை பார்க்க சென்ற போது அங்கே மாமனார் சங்கருக்கும் இளவரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.  

இந்நிலையில் அடிக்கடி மாமனார் குடுபத்துக்குள் இப்படி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சங்கர் தனது குடும்பத்தோடு பக்கத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்று இருக்கிறார். அப்போது சங்கரின் வீடு தீப்பற்றி எரிந்து இருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து அக்கமபக்கத்தில் இருந்தவர்கள் சங்கருக்கு உடனடியாக போனில் விபரத்தை தெரிவித்துவிட்டு, வாழப்பாடி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்கள். வாழப்பாடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.  

மேலும் வீடு தீப்பற்றி எரிந்ததால் வீட்டிற்குள் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கிறது. இதனால் இந்த சம்பவத்திற்கு காரணம் தனது மருமகன் இளவரசன் தான் என்று மாமனார் சங்கர் சந்தேகம் கொண்டிருக்கிறார். இதை அடுத்து தன் மருமகன் மீது வாழப்பாடி போலீஸில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.