டைஃபாய்ட் காய்ச்சல் வந்தவருக்கு பேய் விரட்டுவதாக சாட்டையடி; மாணவி உயிரிழப்பு !

டைஃபாய்ட் காய்ச்சல் வந்தவருக்கு பேய் விரட்டுவதாக சாட்டையடி; மாணவி உயிரிழப்பு ! - Daily news

ராமநாதபுரம் மாவட்டம் கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீர செல்வம். இவருக்கு கோபிநாத்  என்ற மகனும், தாரணி  என்ற மகளும் உள்ளனர். 19 வயதாகும் தாரணி, கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது தாய் கவிதா 9 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்துவிட்டார். இந்நிலையில் தாரணி, அவரது தாயின் நினைவிடத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.


வீடு திரும்பிய தினத்திலிருந்து தாரணிக்கு காய்ச்சல் வந்ததுள்ளது. நன்றாக இருந்த தாரணிக்கு திடீரென காய்ச்சல் வர காரணம், அவர் நினைவிடத்துக்கு சென்று வந்தது தான் என உறவினர்கள் கூற, தாரணிக்கு பேய் பிடித்துள்ளது என நினைத்து அவரது தந்தை வீரசெல்வம் ஒரு பெண் பூசாரியிடம் தாரணியை அழைத்து சென்றுள்ளார்.


அந்த பெண் பூசாரியும், தாரணிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, பேயை விரட்டுவதற்காக தாரணியை சாட்டையால் தாக்கியுள்ளார். இதனால் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்ட தாரணியை, வீட்டிற்கு அழைத்து வந்தவுடன் வீட்டில் உயிரிழந்துள்ளார்.


அதன் பிறகு தாரணியின் உடல் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. உடலை பரிசோதித்த மருத்துவர்கள் தாரணிக்கு டைஃபாய்ட் காய்ச்சல் ஏற்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், பேய் பிடித்துவிட்டதாக நினைத்து, பூசாரியிடம் அழைத்து சென்று சாட்டையால் அடித்ததில் பரிதாபமாக தாரணி உயிரிழந்துள்ளார். 


காய்ச்சல் வந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் பூசாரியிடம் அழைத்து செல்லும் மூட நம்பிக்கையும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி பணம் பறித்து வரும் கோடாங்கிகளும் ராமநாதபுரத்தில் அதிகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். 

Leave a Comment