போலீசார் ஒருவர், கல்லூரி பேராசிரியை ஒருவரை ஊர் ஊராக அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த 29 வயது இளம் பெண் ஒருவர், அங்குள்ள ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

அந்த புகாரில், “நான் கோவையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறேன். எனது தந்தை, கோவை மத்தியச் சிறையில் உதவி ஜெயிலராக வேலை பார்த்து வருகிறார். 

நாங்கள் சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தோம். அப்போது, சிறையில் போலீஸ்காரராக வேலை பார்த்த ரவிக்குமார் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரும் சிறை குடியிருப்பிலேயே வசித்து வந்தார். 

இதனால், நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால், இந்த சந்திப்பானது நாளடைவில் எங்களுக்குள் காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் நாங்கள் காதலிக்க தொடங்கிய பிறகு, அவர் என்னை பொள்ளாச்சி, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு  அழைத்துச்சென்றார்.

இந்த பயணத்தின் போது, அங்கெல்லாம் நாங்கள் அறை எடுத்து தங்கினோம். அந்த தருணங்களில் என் காதலன் ரவிக்குமார் என்னிடம் 'திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள்' கூறி, என்னிடம் உல்லாசமாக இருந்தார். 

ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் அவர் திருப்பூருக்கு மாறுதலாகி சென்றார். 

இதனையடுத்து, நான் அவரிடம் திருமணம் செய்ய வற்புறுத்தினேன். இதனைத் தொடர்ந்து, நாங்கள் கடந்த மார்ச் 28 ஆம் தேதி பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில் வைத்து அவர் என்னை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு, நாங்கள் இருவரும் அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தோம். 

இதனால், நான் அவரிடம் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு வற்புறுத்தினேன். ஆனால், அவர் என்னை அழைத்துச் செல்ல மறுத்து விட்டார். 

அததுடன், என்னுடைய செல்போன் எண்ணையும் அவர் பிளாக் செய்து விட்டார். இதனால், சந்தேகம் அடைந்த நான் அவரைப் பற்றி விசாரித்த போது, அவர் என்னை ஏமாற்றி விட்டு, அவரது பெற்றோர் துண்டுதலின் பேரில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தது எனக்கு தெரிய வந்தது. 

இது குறித்து, நான் அவரை தேடிச் சென்று விளக்கம் கேட்ட போது, அவர் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.

இதனால், என்னை திருமணம் செய்து ஏமாற்றி உல்லாசமாக இருந்து விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்யும் அந்த போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, அந்த புகாரில் அந்த பெண் வலியுறுத்தி உள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், “சம்மந்தப்பட்ட போலீஸ்காரர் ரவிக்குமார், அவரது பெற்றோர் ஆகியோர் மீது கொலை முயற்சி, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து” தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், கோவையிலும் தமிழகத்தில் உள்ள சக போலீசார் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.