பெண் போலீஸ்க்கு கத்தி குத்து! கோயில் திருவிழாவில் அடாவடி..

பெண் போலீஸ்க்கு கத்தி குத்து! கோயில் திருவிழாவில் அடாவடி.. - Daily news

தமிழ்நாட்டில் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவிடம், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசியில் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார்.

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் என்னும் இடத்தில் அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது. 

இந்த கோயில் திருவிழாவிற்காக, அந்த பகுதியைச் சேர்ந்த பாதுகாப்பு பணிக்கு காவல் பெண் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் தெரசா உள்பட, சில போலீசார் பாதுகாப்பிற்காக பழவூர் சென்றிருந்தனர். 

அதன் படி, அந்த கோயில் கொடை விழா முடிந்த பிறகு, அங்கு வைக்கட்டு இருந்த பிளெக்ஸ் போர்டுகளை அகற்றப்பட்டு உள்ளது.

அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், காவல் பெண் உதவி ஆய்வாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். 

ஒரு கட்டத்தில், இந்த வாக்கு வாதம் முற்றிய நிலையில், ஆறுமுகம் திடீரென அந்த காவல் பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தி உள்ளார். இதில், அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்த நிலையில், காயம் அடைந்த அந்த பெண் காவல் உதவி ஆய்வாளரை, அங்கிருந்த சக போலீசார், உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.  அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகம் மீது ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக  வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கைப் பதிவு செய்தது எஸ்.ஐ மார்க்கரேட் தெரசா தான் என்றும் கூறப்படுகிறது. இந்த முன் விரோதம் காரணமாக, அதனை மனதில் வைத்துதான், தற்போது ஆறுமுகம் அந்த பெண் எஸ்.ஐ.யை, கத்தியால் குத்தியிருக்கலாம் என்றும், கூறப்படுகிறது. 

மேலும், கோயில் திருவிழாவில் காவல் பெண் உதவி ஆய்வாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆறுமுகத்தை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவல் பெண் உதவி ஆய்வாளரை, நெல்லை சரக டிஐஜி உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன், நலம் விசாரித்தனர். 

அதே நேரத்தில், நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ள பதிவில், “திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றும், தாக்குதலுக்கு ஆளான சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளேன்” என்றும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பகிர்ந்து உள்ளார்.

Leave a Comment