திருப்பத்தூர் அருகே பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அப்பா தான் தனது அம்மாவை கழுத்தை நெரித்து கொன்றதாக 4 வயது சிறுவன் சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சந்தியா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது. இதனையடுத்து அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு எடுத்து வரப்பட்டது. சந்தியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர் மத்தியில் சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் சந்தியாவின் கணவர் யோகநாத் தனது மனைவியின் சடலத்தை காண்பதற்கான வந்தபோது, சந்தியாவின் உறவினர்கள் யோகநாத்தை சரமாரியாக தாக்கினர். பெண்ணின் உறவினர்கள் யோகநாத்தை சடலத்தை பார்க்க அனுமதிக்க மறுத்தனர். அதோடு இது தற்கொலை தானா என்ற சந்தேகத்திலும் பெரும் கைகலப்பு உருவானது. 

இந்நிலையில் சம்பவத்தன்று தனது அப்பாதான் அம்மாவை கழுத்தை நெரித்து கொன்றதாக அவர்களது 4 வயது மகன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போலீசார் இந்த வழக்கை தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.