தூத்துக்குடி மாவட்டத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் கட்டுப்பாட்டிலுள்ள 1400 ஏக்கர் நிலங்கள் மோசடி செய்த கிரிமனல் குற்றவாளி கிருஷ்ணப்பிள்ளை மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வளன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

supreme courtதிருநெல்வேலி மாவட்டம் லெவிஞ்சிபுரத்தில் உள்ள கேப் தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர் தான் கிருஷ்ணப்பிள்ளை. முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கட்டுப்பாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 1,400 ஏக்கர் நிலங்களை கல்வி தந்தை என்ற போர்வையில் போர்ஜரி செய்தவர் தான் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மகன் ஐயப்பா என்கிற கார்த்திக் ஆகியோர்.
 
இந்த நில மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காவல்கிணறு வளன் என்பவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கின் விபரம் வருமாறு:  பி.ஏ.சி.எல். என்ற தனியார் நிறுவனம் இந்தியா முழுவதும் குறைந்த விலையில் நிலங்கள் விற்பனை செய்வதாக சொல்லி பல்லாயிரக்கணக்கான நபர்களிடம் சுமார் 49 ஆயிரம் கோடி நிதி வசூல் செய்து இந்தியா முழுவதும் சுமார் 11,000 ஏக்கர் நிலங்களை வாங்கினர். இதில் சுமார் 3,000 ஏக்கர் நிலங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் வாங்கப்பட்டுள்ளது.
 
ஆனால் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய சந்தாதாரர்களுக்கு உறுதி அளித்தபடி நிலங்கள் தராததாலும் டெபாசிட் செய்த பணத்தையும் திருப்பி தராததாலும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. அதனடிப்படையில், அந்நிறுவனத்தில் பணத்தை செலுத்தியவர்கள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் கடந்த 02.02.2016 அன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்து மேற்சொன்ன பி.ஏ.சி.எல். நிறுவனம் இந்தியா முழுவதும் வாங்கிய நிலங்கள் மற்றும் அதன் சொத்துக்களை அந்த கமிட்டியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த நிலங்களை விற்பனை செய்து டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி தருமாறு உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்சொன்ன நிறுவனத்திற்கு சொந்தமான 1,400 ஏக்கர் நிலங்கள் மும்பையை சேர்ந்த எஸ்.பி. இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் (பி) லிட் மற்றும் அரினா சோலார் கம்பெனி (பி) லிட் என்ற நிறுவனங்களுக்கு சோலார் பேனல்கள் அமைப்பதற்கு தேவைப்படுவதாகவும், அந்நிறுவனம் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மகன் ஐயப்பா என்கிற கார்த்திக் இயக்குனராக உள்ள கிருஷ்வா பவர் பிரைவேட் லிட் என்ற நிறுவனத்தை நாடியுள்ளனர். இந்த நிறுவனம் நிலங்களை மோசடி செய்து அபகரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாகும்.
 
அதனைத்தொடர்ந்து  நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா கமிட்டி கட்டுப்பாட்டில் உள்ள பி.ஏ.சி.எல். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை நிலமோசடி மன்னன் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மகன் ஐயப்பா என்கிற கார்த்திக் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்தும் அரசு ஆவணங்கள் மற்றும் முத்திரைகளை போலியாக தயார் செய்தும், சார்-பதிவாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று சிபிஐயால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடத்தை இந்த நவீன கணினியுக காலத்திலும் நூதன முறையில் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர்.  
 
மேலும் இதற்கு முன்பும் இதேபோல் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக இவர்கள் மீது காவல் துறையினரால் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு இன்றளவும் நிலுவையில் உள்ளது. இந்த மோசடி குறித்து முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திடக்கோரி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வளன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் 06.01.2021 அன்று தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மேற்கண்ட மோசடிகளைப் பற்றி விசாரணை செய்ய மாநில காவல்துறைக்கும் அதிகாரம் உள்ளது என்றும் பி.ஏ.சி.எல் நிறுவனத்திற்கு சொந்தமான கையகப்படுத்தப்பட்ட நிலங்களை லோதா கமிட்டியின் தடையின்மை சான்றிதழ் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என தமிழக அரசின் வருவாய்த்துறை முதன்மை செயலாளருக்கு கடந்த 14.05.2018 அன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு, இறுதி விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நிலமோசடி பற்றி வழக்கின் மனுதாரர் வளனிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் கல்வி சேவை வழங்குவதாக வெளியில் சொல்லிக்கொண்டு இவ்வாறான பல நிலமோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஏற்கனவே காவல் துறையினரால் பல வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள, மிகப்பெரிய நிலமோசடி குற்றவாளி தான் இவர் என்றும். மேற்சொன்ன எஸ்.பி. இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் மற்றும் அரினா சோலார் கம்பெனி ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்த சுமார் 700 ஏக்கர் நிலங்கள் போக மீதமுள்ள நிலங்கள் கிருஷ்ண பிள்ளையின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான கேப் இன்பபராஸ்ட்ரக்சர்ஸ், கேப் எனர்ஜி, கிருஷ்வா பவர் லிமிடெட் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான நபர்களான சரவணன், குமார் ஆகியோர் பெயரில் உள்ளது என தெரிவித்தார் . 

இதில் பல காவல்துறை உயர் அதிகாரிகளை தனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டும், இவர் முன்னாள் முதல்வரிடம் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டும் அதனை காட்டி மோசடியில் ஈடுபடுவதும் தான் கிரிமினல் குற்றவாளி கிருஷ்ணப்பிள்ளையின் முழுநேர தொழிலாகும்.  உச்ச நீதிமன்ற நீதிபதியையும், சிபிஐயையுமே எளிதாக ஏமாற்றிய இவர் எத்தனை அப்பாவிகளின் நிலத்தை எல்லாம் அபகரித்து இருப்பார் என்பதும் அவர் கைது செய்யப்படும் போது தான் தெரிய வரும். 
 
மேலும் தான் தொடர்ந்த வழக்கில் பல கட்ட விசாரணைகளுக்கு பின்பு வழக்கானது அவர்களுக்கு எதிராக முடிந்து அவர்கள் சிறை செல்வது உறுதி என்பதை தெரிந்த பின்பு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞரை நியமித்து வாதாடி வருகிறார். ஆனால், இதில் நீதி கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன் போராடுவேன் என்று ஆவேசமாக தெரிவித்தார். 
 
இந்த நிலமோசடி குறித்து சில தினங்களுக்கு முன்பு பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த மாநில பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் கடந்த ஆட்சியில் பி.ஏ.சி.எல். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை பதிவு செய்யக்கூடாது என்று சிபிஐ உத்தரவிட்ட பிறகும் சுமார் 3,000 ஏக்கர் நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து விசாரணை செய்திட விரைவில் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
 
அமைச்சர் குறிப்பிட்டுள்ள 3,000 ஏக்கர் நிலத்தில் சுமார் பாதி நிலங்களை மோசடி மன்னன் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மகன் ஐயப்பா என்கிற கார்த்திக் ஆகியோரே மோசடி செய்துள்ளனர். இவர்களை முறையாக விசாரணை செய்தால் இவர்கள் செய்துள்ள திடுக்கிடும் பல நில மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும்.  காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா? என்பதே தூத்துக்குடி மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும்.