கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் இருக்கும் போட்டியில் இப்போதைக்கு முன்னணியில் இருப்பது பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்தான். இருப்பினும், ரஷ்யா இந்த விஷயத்தில் இதை ஒப்புக்கொள்வதாக இல்லை. தாங்கள்தான் முன்னணியில் இருப்பதாகத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து சோதனையைச் செய்யும் முன்பே, கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் ராணுவம் சார்பில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பெயர் சொல்லப்படாத அந்த தடுப்பு மருந்து, தற்போது மீண்டுமொரு முறை தலைப்பு செய்தியாகியுள்ளது. ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியின் படி ரஷ்யா, கொரோனா வைரஸிற்கு எதிராக தயாரித்திருக்கும் மருந்தை வருகின்ற ஆகஸ்ட் 10-12 தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Gamaleya Research Institute of Epidemiology and Microbiology என்ற ஆராய்ச்சி நிறுவனம் மாஸ்கோவில் இந்த மருந்தினை தயாரித்து உள்ளது. மருத்துவ கட்டுப்பாட்டாளர்களால் இந்த மருந்து பதிவு செய்யப்பட்டவுடன் 3 முதல் 7 நாட்களில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில், ஜூலை 2ம் வாரத்தில் இந்த மருந்து தொடர்பாக முதலில் அறிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக அறிவிப்புகள் வெளிவந்துக் கொண்டிருந்த நிலையில், இப்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஜுலை தொடக்கத்தில்தான் மனிதர்கள் மீதான சோதனையின் முதல் கட்டத்தை தான் அடைந்திருந்ததாக சொன்னது ரஷ்யா. பின் ஜூலை 13ம் தேதி தான் இரண்டாம் கட்ட சோதனைகளை துவங்கியது என்று TASS செய்தி நிறுவனம் அறிவித்திருந்தது.

மூன்று கட்ட சோதனைகளை முடிக்காத வரையில் எந்தவிதமான தடுப்பூசிகளுக்கும் அனுமதி கிடைக்காது. சாதாரண நாட்களில், இந்த மூன்று கட்ட தடுப்பூசி சோதனைக்கும் நிறைய நேரம் எடுக்கும். அதிக நாட்கள் தேவைப்படும். இதனை பார்க்கையில் ரஷ்யா இரண்டாம் கட்ட சோதனைகளை உடனடியாக முடிக்க திட்டமிட்டுள்ளது என்றும், மூன்றாம் கட்ட சோதனைகளை மேற்கொள்வதற்கு முன்பே மக்கள் மீது பயன்படுத்த திட்டமிட்டிருப்பதும் தெளிவாகிறது. கேம்லயா தடுப்பூசி நிபந்தனையின் அடிப்படையில் பதிவு செய்ய உள்ளது என்று ப்ளூம்பெர்க் செய்தி அறிவிக்கிறது. இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் (ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை) க்ளினிக்கல் ட்ரையல்கள் முடியும் காலம் வரை இந்த தடுப்பூசியை துறைசார் வல்லுநர்கள் இன்றி வேறு யாரும் பயன்படுத்த இயலாது என்பது தெளிவாகிறது. அநேகமாக இந்த க்ளினிக்கல் ட்ரையல் செப்டம்பருக்குள் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் இப்படி, அவசர கதியில் கொரோனா வைரஸிற்கு மருந்து தயாரிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் எனக்கூறி குறித்து பலரும் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். அனைவரின் பாதுகாப்பையும் மனதில் கொண்டு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் இப்படி தடுப்பூசியை அவசரமாக வெளியிடுவதற்கு எதிராக எச்சரித்து வருகின்றனர். பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் நோய் பரவலை கட்டுப்படுத்துவதுதான் முதல் பணி என்பதில் ரஷ்யா உறுதியாக உள்ளது.

இன்னொரு பக்கம், ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியர்கள் மீதான ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் தடுப்பூசி சோதனை திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

புனேவை தலைமையகமாக கொண்ட சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனம், இந்தியர்கள் மீது ஆக்ஸ்ஃபோர்ட் நிறுவனத்தின் தடுப்பூசியை சோதிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த நிறுவனத்தின் ஒப்புதலல் படிவத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிறுவனத்திடம் அறிவித்துள்ளது. இந்தியர்கள் மீது ஆக்ஸ்ஃபோர்டின் தடுப்பூசி சோதனைக்கு எப்போது வரும் என்பது இன்னும் தெளிவற்ற நிலையில் உள்ளது.

மனித பரிசோதனையின் இறுதி கட்டத்தில் இருக்கும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழத்தின் இந்த தடுப்பூசி பணிகள், ப்ரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படித்தான் இந்தியாவிலும் விரைவில் செய்யப்படவுள்ளது. ஒருவேளை இந்த தடுப்பு மருந்து வேலை செய்தால், இந்தியாவின் சீரம் நிறுவனம் இந்த தடுப்பூசியை குறைந்த விலைக்கு தயாரித்து உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுநாள் வரை ஆய்வுசெய்யப்படும் தடுப்பூசி சோதனையில், மனிதர்கள் மீதான சோதனையை அதிகாரபூர்வமாக 25 நிறுவனங்கள் செய்து வருகின்றன. மூன்றாம் கட்ட சோதனையில் மூன்று நிறுவனங்கள் உள்ளன. 139 தடுப்பூசிகள் ப்ரீ க்ளினிக்கல் ட்ரையலில் உள்ளது. இந்திய ஆய்வுக்குழுக்களை பொறுத்தவரையில், இரண்டு இந்திய மருந்துகள் முதற்கட்ட சோதனையில் உள்ளது. அதிலொன்றுதான் கோவேக்ஸின். இது விரைவில் அடுத்தகட்ட சோதனைக்கு செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

- ஜெ.நிவேதா