உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சூழலில், இன்னமும் எந்த மருந்தும் இதற்கான உறுதியான மருந்தாக உலக சுகாதார நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக சொல்லப்படவில்லை. ஆனாலும் பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை முழுமையாக குணப்படுத்தவும் தடுக்கவும் உதவுவதாக அவ்வபோது அந்தத் துறை சார்ந்த மருத்துவர்கள் சொல்லி வருகிறார்கள். தமிழகத்திலும்கூட, சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சென்னையை சேர்ந்த சித்த மருத்துவர் வீரபாபு.

இதற்கிடையில் இப்போது, தேங்காய் எண்ணெய் உபயோகித்தால் கோவிட் - 19 கொரோனாவை நம்மால் தடுக்க முடியும் என்றும், தேங்காய் எண்ணெய் ஒருவரின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர் ஆய்வாளர்கள் சிலர். இந்தியாவில், பிற இடங்களை விடவும் கேரளாவில்தான் தேங்காய் எண்ணெய் உபயோகம் அதிகமிருக்கும் என்பதால், அங்கிருப்பவர்கள் இதற்கு மேற்கோள் காட்டி சொல்லியிருக்கிறார்கள் அவர்கள். கேரளா, இன்றளவில் கொரோனாவை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்த மாநிலமாக பார்க்கப்படுவது இங்கே கவனிக்கத்தக்க விஷயம்.

இதை தங்களின் ஆய்வின் வழியாக, இந்தியாவின் முக்கியமான மருத்துவ தளமான JAPI (Journal of Association of Physicians) வழியாக தெரிவித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். தேங்காய் எண்ணெய்யின் இம்யூனோ-மாட்யுலேஷன் பலன்களை ஆய்வின் வழியாக வெளிப்படுத்திய அவர்கள், அதன்காரணமாக இவை கொரோனாவுக்கான மைக்ரோப்ஸை அழிக்கும் எனக்கூறியிருக்கிறார்கள். 

ஆய்வாளர்களில் மூத்தவரும், Indian College of Physicians -ன் டீன் மற்றும் இந்திய கொரோனா தடுப்புக்கான மருத்துவக்குழுவின் உறுப்பினருமான மருத்துவர் சஷாங்க் ஜோஷி, இந்த ஆய்வு முடிவு குறித்து பேசும்போது, தேங்காய் எண்ணெய்யில் லாரிக் அமிலம் மற்றும் நல்ல கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதாகவும், அதுவே உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது என்றும் கூறியிருக்கிறார். இவர்தான், `கேரளாவில் தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துகின்றனர் - அதனால்தான் அவர்கள் கொரோனாவை எளிதில் வென்றுவிடுகின்றனர்' என்று கூறியவர். 

இதைத்தொடர்ந்து, பலரும் தேங்காய் எண்ணெய்யின் பலன்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம், ஒருசில மருத்துவர்கள் இந்த மாதிரியான முழுமையான ஆதாரமில்லாத கூற்றுகளை நம்ப முடியாது என்று எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். அப்படி எதிர்ப்பு தெரிவித்த ஒரு மருத்துவர், ``தேங்காய் எண்ணெய்க்கு நிறைய நல்ல குணங்கள் இருப்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அவை கொரோனாவை அழிக்குமா என்றால், உறுதியான ஆதாரம் இங்கு யாரிடமும் இல்லை. தேங்காய் எண்ணெயில் என்னதான் சத்துகள் இருந்தாலும், மனித உடலானது அவற்றை அப்படியே முழுமையாக கிரகித்துக் கொள்ளுமா என்பது, சந்தேகத்துக்கு உட்பட்டதுதான். ஆகவே, இதை எங்களால் அப்படியே ஏற்க முடியாது" என தனது பதிவொன்றில் கூறியுள்ளார்.

தேங்காய் எண்ணெயில் இருக்கும் நன்மைகளாக ஆய்வு சொல்பவை சில...

* வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு காரணமான பாக்டீரியாக்களை இது அழிக்கும்

* கோவிட் - 19 போன்ற வைரஸ் வகைகளின் மீது இவை செயல்படும்

* சரும பாதுகாப்புக்கு உதவும்

* லாரிக் அமிலம் இருப்பதால், வளர்சிதை மாற்றங்களை சீராக்கும்.

இவையாவும் ஒருபக்கமிருக்க, தேங்காய் எண்ணெய் முக்கியமான ஒரு தீங்கையும் விளைவிப்பதாக சொல்லப்படுகிறது. அது, இதிலுள்ள கொழுமியம் இதயப்பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமென்பது. இந்தக் காரணத்தால்தான், கேரளாவில் இதய நோயாளிகள் அதிகமிருக்கிறார்களாம். 

இந்த தீங்கு காரணமாக, இதை பொதுவானவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டாம் எனக்கூறியிருக்கிறார்கள் அறிவியலாளர்கள். வாழ்வியல் சிக்கல் இல்லாதவர்கள் வேண்டுமானால், நோய் எதிர்ப்புக்கான விஷயமாக இதை தர சொல்லலாம் என்றும், அதையும்கூட பொத்தாம் பொதுவான அறிவுரையாக சொல்ல முடியாது என்கிறார்கள் அவர்கள்.

ஏற்கெனவே பாரம்பரிய மருத்துவத்தின் மீது பலரும் தங்களின் விமர்சனங்களை வைத்துவரும் சூழலில், இந்த தேங்காய் எண்ணெயும், பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றுவருகிறது.

- ஜெ.நிவேதா.