உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 2.20 கோடியை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7.76 லட்சமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் 8 மாதங்களாக கொரோனாவின் கோரத்தாண்டவம் தொடருகிறது. உலகம் முழுவதும் மொத்தம் 2,20,35,737 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,47,75,237 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

அதேநேரத்தில் 7,76,852 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 54,288 பேருக்கு கொரோனா உறுதியானது.

அமெரிக்காவில்நேற்று ஒரே நாளில்  40,211 பேருக்கும் பிரேசிலில் 23,038 பேருக்கும் ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,701,604 ஆக உள்ளது. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்டிக  இந்தியாவில் 1,976,248 ஆகும். இந்தியாவில் 6,73,431 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,611,626; கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 173,710; கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,970,472.

உலகில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,363,235. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,478,494. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,08,654 ஆக உள்ளது. 3வது இடத்தில் இந்தியா உள்ளது.

இதன்படி பார்த்தால் உலகளவில் மட்டுமன்றி, இந்தியாவிலும் கோவிட் - 19 கொரோனா பாதிப்பானது, ஒவ்வொரு நாளும் அதன் உச்சத்தை தொட்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும். கொரோனா பரவல் குறித்து ஒவ்வொரு நாளும் உலக சுகாதார நிறுவனத்தினர் பத்திரிகைகளில் உரையாடி வருகின்றனர். அப்படி இன்று அவர்கள் பேசுகையில்,

``கொரோனா வைரஸின் முழுமையான செயல்பாடுகள் மற்றும் பரவும் விதம் ஆகியவை குறித்த தெளிவான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. இது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. தொடக்கத்தில் வயதானவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது இளைஞர்கள் மத்தியிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக 20, 30 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் மூலம் கொரோனா அதிக அளவில் பரவுகிறது" என உலக சுகாதார நிறுவனத்தினர் கூறியிருக்கிறார்கள். 

அதிலும், பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாததால், அவர்களால் மற்றவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.  இந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் முதியோரும் அதிக பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொற்றுநோய் பரவல் மாற்றம் அடைந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள சூழலில், அதனுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

தடுப்பூசி கண்டறிவதை போட்டி மனப்பான்மையுடன் பார்க்காமல், சமூகக்கடமையாக பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்ப்பார்ப்பு தெரிவித்துள்ளனர். போட்டி மனப்பான்மையோடு பார்க்கும்போது, விற்பனை நோக்கில் தடுப்பூசி விநியோகம் அமைந்துவிடும் என்பதால், லாபம் மட்டுமே அப்போது கண்ணுக்கு தெரியும் என்பதும் அவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. அப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காது என்றும், அது கொரோனா உலகை விட்டு மறைவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இப்போதும் அதையே அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூடுதலாக, தடுப்பூசியை நாடுகளுக்கிடையேயான போட்டியாக அரசியலாக மாற்றாமல் இருக்கவும் என்றும் கூறியுள்ளனர்.