உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாகப் பல பிரச்னைகள் இருந்தாலும் தற்போதைய நிலையில் உலகளாவிய பெரும் பிரச்னை கொரோனாதான். இன்றைய நிலையிலும் அமெரிக்கா, இந்தியா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. இன்னொருபுறம் நியூசிலாந்து, தான்சானியா போன்ற சில நாடுகள் கொரோனா தொற்று இல்லாத நாடுகளாகவும் மாறிவருகின்றன.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் ஆராய்ச்சி நிலையிலிருந்து பொதுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. சோதனைகள் முடிந்து மருந்து, சந்தைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். உலக நாடுகள் பலவும் கொரோனா தாக்கத்திலிருந்து தங்கள் மக்களைக் காக்கப் போராடி வருகின்றன.

சமீபத்தில், அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, டிசம்பர் 13-ம் தேதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு முதல் சுற்று தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த சுற்றுலா டிராவல்ஸ்  நிறுவனம் ஒன்று  இந்தியாவை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகளை பெற விரும்புவோருக்கு “தடுப்பூசி சுற்றுலா”என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களை ஈர்க்க  அமெரிக்காவிற்கு ரூ. 1.75 லட்சம்  மதிப்புள்ள நான்கு நாள் சுற்றுப்பயணப் பேக்கேஜ்களை கொரோனா வைரஸ் தடுப்பூசியை மையக் கருப்பொருளாகக் கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளது. ஆபத்தான வைரஸ் நோய்க்கிருமிகளுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு "முதல் ஆளாக இருப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது  என அந்த நிறுவனத்தின் விளம்பரத்தை சுட்டிக்காட்டி  டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.

அந்த நிறுவனத்தின் ஒரு வாட்ஸ்அப் விளம்பர செய்தியில் ஃபைசர் தடுப்பூசி அமெரிக்காவில் விற்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் (தற்காலிக தேதி டிசம்பர் 11), தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தடுப்பூசி வழங்க  தயாராக உள்ளோம். ரூ .1.75 லட்சம் செலவில் டெல்லி-நியூயார்க்-டெல்லி விமான டிக்கெட் கட்டணம், மூன்று பகல்  மற்றும் நான்கு இரவுகளுக்கு ஓட்டல் கட்டணம் மற்றும் ஒரு தடுப்பூசி ஆகியவை அடங்கும் என் அதில் கூறபட்டு உள்ளது.

"நாங்கள் எந்த தடுப்பூசியையும் வைத்திருக்கவில்லை அல்லது வாங்கவில்லை. நாங்கள் ஏற்பாடு செய்யும் அனைத்தும் அமெரிக்காவின் சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கும். உங்கள் தேவைகளை மட்டுமே நாங்கள் வழங்குவோம்.  நாங்கள் இப்போது எந்த முன்கூட்டி வைப்புத்தொகையை சேகரிக்கபோவதில்லை. உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், வயது மற்றும் உங்கள் உடல் பிரச்சினைகள் மற்றும் பாஸ்போர்ட் நகலுடன் விண்ணப்பிக்கவும். மீதமுள்ளவை அங்குள்ள சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ அனுமதிகளின்படி செய்யப்படும். அமெரிக்கர்களைத் தவிர மற்றவர்களுக்கு அதிகாரப்பூர்வ விற்பனைக்கு அவர்கள் அனுமதிக்காவிட்டால், நாங்கள் உங்களுக்கு தடுப்பூசி கொடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.