கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் பகுதியிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாகியும் எந்தவித மந்தமும் இல்லாமல் வேகமாக உலக நாடுகளை ஆட்டிபடைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், கோடிக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர்.

கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என சொல்லப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் இறங்கி உள்ளன. இதில் பல நாடுகள் தொடக்ககட்ட வெற்றியை ஈட்டியுள்ளன. இதனால் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன.

தடுப்பூசி பணிகளில், இப்போதைக்கு சீனா மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்றவை தயாரித்த தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. பிரேசில் போன்ற அதிக பாதிப்பு உள்ள நாடுகளில் இந்த தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. ரஷ்யாவும், தான் இறுதி கட்ட ஆய்வில் இருப்பதாக சொல்லி வருகின்றது.

இதைப்போல அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி ஏற்கனவே தொடக்ககட்ட சோதனைகளை முடித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியதாக சொல்லப்பட்டுள்ளது. அதற்காக, அமெரிக்காவிலிருந்து 30 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு உண்மையான மருந்தும், மீதமுள்ளவர்களுக்கு போலி மருந்தும் செலுத்தப்பட்டது.

இவர்கள் அனைவரையும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒரே முறையாக 30 ஆயிரம் பேரிடம் தடுப்பூசி பரிசோதனை நடத்துவது முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த தடுப்பூசியை பல்வேறு இனத்தினர், பலவேறு வயதுக்குட்பட்டவர்கள் என அமெரிக்காவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் மக்களிடம் செலுத்தி சோதிக்க வேண்டியது முக்கியமானது என டாக்டர்கள் கூறியிருந்தனர். அந்தவகையில் தற்போது பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களிடம் இந்த தடுப்பூசி செலுத்தி சோதிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசியின் தொடக்ககட்ட சோதனையில் பங்கேற்றவர்கள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதனால் தடுப்பூசி பரிசோதனைக்கு ஒன்றரை லட்சம் பேர் வரை பதிவு செய்தனர்.

இந்த தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையை எட்டியுள்ள போதிலும், இது பாதுகாப்பானதா என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லை. இந்த தடுப்பூசியின் முதற்கட்ட சோதனையில் பங்கேற்றவர்களுக்கு காய்ச்சல், தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி போன்ற சின்னச்சின்ன பக்க விளைவுகள் இருந்தன.

அதேநேரம் இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவை எதிர்த்து நிற்பதற்கு இது முக்கிய தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பரிசோதனை வெற்றி பெற்றால் வர்த்தக ரீதியில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை மாடர்னா நிறுவனம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி முதலில் தயாரானால், மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருவது போல் தடுப்பூசியையும் நாங்கள் அனுப்பி வைக்க வாய்ப்பிருக்கிறது’ என்றார்.

2021ம் ஆண்டிற்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ட்ரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. ஒரு சில தடுப்பூசிகளின் பரிசோதனைகள் படிப்படியாக வெற்றியடைந்து வருகின்றன. பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா உருவாக்கிய தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் ஆரம்பமாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் வெளியிட்டிருந்தது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 30,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது. 

அமெரிக்காவில் 44,98,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,52,320 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 21,85,894 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.