தனியார் பத்திரிகையாளர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் - கி.வீரமணி

தனியார் பத்திரிகையாளர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் - கி.வீரமணி - Daily news

தனியார் தொலைக்காட்சிச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபர் மோசஸ் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், நிருபர் மரணம் பச்சை படுகொலை என்று கூறியுள்ள ஸ்டாலின் கொலையாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ''ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனப் போற்றப்பட்டுவரும் பத்திரிகை - ஊடகங்களின் கருத்துரிமையின் கழுத்தில், ‘அரசு கேபிள்’ என்ற கயிறு சுற்றப்பட்டு, ஆள்வோரின் தவறுகளை அம்பலப்படுத்தும் ஊடகங்களை நெரிப்பதும் நெருக்கடி தருவதும், ஆதரவாகக் குரல் கொடுத்தால் கயிறு தளர்வதும் கண்ஜாடை காட்டுவதும், தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, சமூக விரோதக் கும்பலால் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் (தமிழன்) தொலைக்காட்சியைச் சேர்ந்த மோசஸ் என்ற செய்தியாளர், சென்னை - குன்றத்தூர் அருகே நடைபெறும் சமூக விரோத செயல்கள், போதைப் பொருள் விற்பனை போன்றவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து பொதுமக்களின் கவனத்திற்கு வைத்ததால், தொடர் மிரட்டலுக்குள்ளாகியிருக்கிறார்.

இதுகுறித்து, காவல்நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இரவு நேரத்தில் அவரை அலைபேசியில் அழைத்து, வீட்டை விட்டு வெளியே வரச்செய்து, பேசிக்கொண்டிருக்கும்போதே அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள்.

மோசஸின் அலறல் குரல் கேட்டு அவரது தந்தை வெளியே வந்தபோது, சமூக விரோதக் கும்பல் ஓடிவிட்டது. குற்றுயிராக இருந்த மோசஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பச்சைப் படுகொலைக்கு எனது மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்; இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கஞ்சா வியாபாரம் செய்வது உள்ளிட்ட சமூக விரோத கும்பல்களுக்கு, எடப்பாடி அ.திமு.க. அரசும், அதன் காவல்துறையும் பாதுகாப்பளிப்பதும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருப்பதும், ஜனநாயகத்தின் மீது விழுகின்ற சம்மட்டி அடியாகும்.

தொலைக்காட்சிச் செய்தியாளர் மோசஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து; பத்திரிகைச் சுதந்திரம் காப்பாற்றப்பட தி.மு.கழகம் என்றென்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக தனியார் தொலைக்காட்சி நிருபர் மோசஸின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு 75 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல, ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகைத் துறையினருக்குப் பாதுகாப்பில்லாத சூழல் அரசுக்கும், காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதல்ல என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (நவ. 10) வெளியிட்ட அறிக்கை:

"தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் என்பவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது, கடும் கண்டனத்திற்குரியது.

சமூக விரோதிகள் குறித்த செய்தியை வெளியிட்டமைக்காக கொலை செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டில் கூலிப் படையினரைக் கொண்டு கொலைகள் நடத்தப்படுவது பெருகியுள்ளது. இதைப் பலமுறை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகைத் துறையினருக்குப் பாதுகாப்பில்லாத சூழல் அரசுக்கும், காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதல்ல!

அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். இதைத் தனிப்பட்ட ஒரு பத்திரிகையாளருக்கு ஏற்பட்ட ஒன்றாகக் கருதாமல், ஒட்டுமொத்த ஊடகத் துறையினருக்கான சவாலாகக் கருதி உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட மோசஸ் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Leave a Comment