3 மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு மீண்டும் தமிழகத்தில் உயிர் பலி! தஞ்சை மக்கள் பீதி..
3 மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு தமிழகத்தில் மீண்டும் உயிர் பலி ஏற்பட்டுள்ள சம்பவம், தஞ்சை மக்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா என்னும் கொடிய வைரசானது, முதல் அலையை கடந்து 2 வது அலையும் வந்து, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் 3 வது அலையும் கடந்திருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ், மெல்ல இயல்பு நிலை திரும்பியிருந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல மீண்டும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கையானது கடந்த சில வாரங்களாக மீண்டும் உயர்ந்திருக்கிறது.
அதன்படி, தமிழகத்தில் நாளோன்றுக்கு கடந்த மாதம் வரை சுமார் 25 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் இந்த தொற்று எண்ணிக்கையானது சுமார் 100 க்கும் மேல் அதிகரித்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து, தினசரி பாதிப்பு 200 யையும் தாண்டி பதிவாகி வருகிறது.
இதன் காரணமாகவே, “கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு வலியுறுத்தி இருந்தார்.
அத்துடன், தமிழகத்தில் நேற்று 14 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆண்கள் 257 பேரும், பெண்கள் 219 பேரும் உள்பட 476 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
அதாவது, தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இது நேற்று சற்றே அதிகரித்து ஒரே நாளில் 476 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
முக்கியமாக, தமிழகத்தில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 1938 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும், இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது தற்போது 34,58,445 ஆகவும் அதிகரித்து உள்ளது.
இவற்றுடன், தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு ஏதும் ஏற்பாடத நிலையில், கிட்டதட்ட 3 மாதங்களுக்குப் பிறகு நேற்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.
அந்த பெண்ணுக்கு, எந்தவித இணை நோயும் இல்லாத நிலையில், அவர் உயிரிழந்து இருப்பது மருத்துவர்களையும், அப்பகுதி மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அந்த இளம் பெண், நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பகோனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அப்போது அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது” என்றும், கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, அந்த இளம் பெண் உயர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறிப்பாக, “கொரோனாவால் உயிரிழந்த அந்த இளம் பெண், எந்த வகையான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்?” என்பதை கண்டறிய அவரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியானது, முன்னதாக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான், “தமிழ்நாட்டில் கடந்த 2 வாரத்தில் கொரோனா பரவல் 4 மடங்கு அதிகரித்து உள்ளது என்றும், அதே நேரத்தில் 13 மாவட்டங்களில் மட்டுமே இந்த பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த தொற்று எண்ணிக்கையானது மிக விரைவில் தமிழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவும் அபாயம் உள்ளதாகவும்” மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.