சாத்தான் குளம் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று “5 நாட்கள் வச்சு அடிச்ச நிலையில் என் கணவனால் சிறுநீர் கூட போக முடியவில்லை” என்று பாதிக்கப்பட்டவரின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட அன்றே அவர்கள் இருவரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

குறிப்பாக தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் அவர்கள் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. முக்கியமாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகப் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினர். 

இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் இந்த கொடுஞ் செயலுக்கு பெரும்பாலான இந்திய பிரபலங்கள் முதல் சாமானிய மனிதர்கள் வரை பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். 

இது குறித்து, மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கை விசாரித்தது. இந்த விவகாரம் தொடர்பாகச் சாத்தான் குளம் காவல் நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் போது, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களைத் தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இமெயில் மூலம் புகார் அளித்த நிலையில், சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் பிறகு, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு எடுத்து வழக்குப் பதிவு செய்தது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக சாத்தான்குளம் லாக்கப் டெத் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ. ரகு கணேஷ், பால்துரை தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 போலீசார் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த 5 போலீசாரையும் கைது செய்து சிறையில் இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாறியது. அதன் தொடர்ச்சியாக மேலும் 5 போலீசார் என மொத்தம் 10 போலீசார் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.போலீசாரின் இந்த செயல், தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, போலீசார் மீது இருந்த நன்மதிப்பை முற்றிலுமாக கெடுத்தது.

இந்நிலையில், சாத்தான் குளம் காவல் நிலையம் மீண்டும் அதேபோன்ற ஒரு புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. சாத்தான் குளம் தைக்கா தெருவைச் சேர்ந்த மார்ட்டின் என்பவரை, சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் சேவியர், உதவி ஆய்வாளர் ராஜா ஆகியோர் விசாரணை என்ற பெயரில் மார்ட்டினை விசாரணை என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பிறகு, அவரை சாத்தான் குளம் காவலர் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, இரவு முழுவதும் அவரை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

இதில், மார்ட்டின் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், அவர் 24 ஆம் தேதி பிற்பகல் நேரத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக 5 நாட்கள் சட்டத்திற்குப் புறம்பாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்ட அவர், நேற்று இரவு 7 மணி அளவில் திருவைகுண்டம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மார்ட்டினை நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்தார்.

இதனையடுத்து அங்கிருந்து விடுவிக்கப்பட்ட மார்ட்டினை போலீசார் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், “போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற என் கணவரை, சட்ட விரோதமாக அடித்துத் துன்புறுத்தியதால், என் கணவரால் சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியவில்லை என்றும், இதனால் அவர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார். இது தொடர்பாக எனக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்றும், பாதிக்கப்பட்ட மார்ட்டினின் மனைவி சரோஜா, சாத்தான்குளம் போலீசார் மீது பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மார்ட்டின்னுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் களம் இறங்கி உள்ளதாகவும், இது தொடர்பாக அந்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அந்த கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், சாத்தான் குளம் போலீசாருக்கு மேலும் சிக்கல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.