கொரோனா பரவல் குறித்து, தினந்தோறும் உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஊடகங்கள் வழியாக மக்களிடம் பேசி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக, ஐந்து நாள்களுக்கு முன்பு, அதாவது ஜூலை 31 ம் தேதி, உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ரோஸ், ``கொரோனா ஆபத்து குறித்து இளைஞர்களை நம்பவைப்பது நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாக உள்ளது. இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பைக் கைவிடும் இடங்களிலெல்லாம், கொரோனா பரவல் அதிகரிப்பதை காண முடிகிறது. இதற்கான சான்று எங்களிடம் உள்ளது. நாங்கள் முன்பே சொல்லியிருக்கிறோம் இருந்தும் மீண்டும் சொல்கிறோம், இளைஞர்கள் வெல்ல முடியாதவர்கள் இல்லை. அவர்களுக்கும் தொற்று ஏற்படலாம் அதனால் உயிரிழக்கலாம்.

இளைஞர்கள்தான் போதியளவு விழிப்புஉணர்வின்றி வைரஸ் பரவலை அதிகரிக்கவைக்கின்றனர். எனவே, இளைஞர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முயலவேண்டும். மற்றவர்களைப் போல முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, தலைவர்கள் தங்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். யாராக இருந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம் என்ற போதிலும் தலைவர்களை குறிப்பிட்ட சொல்லக்காரணம், தலைவர்கள்தான் மாற்றத்தின் இயக்கமாக இருக்க வேண்டும். கோவிட்-19 வெளிப்படுத்தும் அபாயத்தைக் குறைப்பதில் நம் அனைவருக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இளைஞர்கள் மீது வைக்கப்பட்டிருந்த இந்த விமர்சனம், மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்றைய தினம் பேசிய உலக சுகாதார நிறுவன அதிகாரியொருவர், ``உலகம் முழுவதும், இளைஞர்கள் அதிகமாக வெளியில் செல்கிறார்கள். குறிப்பாக, கடற்கரைகள் - இரவு நேர பார்ட்டிகளில் பங்கேற்கும் நபர்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள், கொரோனாவை நிச்சயமாக பெற்றுவிடுகின்றனர். கடந்த ஐந்து மாதத்தில் மட்டும், 15 - 24 வயதை ஒட்டிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது" என்று அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 24 ம் தேதி, 4.5 % என்றிருந்த நோயாளிகள் சதவிகிதம், ஜூலை 12ம் தேதி,15% என்றாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளாக ஐரோப்பிய நாடுகளும் ஆசிய நாடுகளும் தான் இருக்கின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார். ஐரோப்பாவில் ஸ்பெயின், ஜெர்மனி, ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகளும்; ஆசியாவில் ஜப்பானும் அதிகளவு இளைய சமுதாய நோயாளிகளை பெறுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

``இளைஞர்கள், மாஸ்க் அணிவது - சமூக இடைவெளி விட்டு செயல்படுவது, போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதில்லை" என்று, ஆய்வாளரொருவர், கருத்து தெரிவித்துள்ளார். இளைய சமுதாயம், இந்தளவுக்கு விழிப்புஉணர்வின்மையோடு இருப்பது ஆபத்தாக மாறும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. 

இதுவரை உலக சுகாதார நிறுவனம் அறிவித்த உலகளாவிய பெருந்தொற்று நோய் மற்றும் மருத்துவ அவசர நிலையில், மிக மோசமானது இந்த கோவிட் 19 கொரோனா தொற்றுதான் என்று அவர்களேவும் கூறியிருந்தனர். மேலும், கொரோனா ஏற்படுத்திவிட்டு போகும் தாக்கம், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். அப்படியிருக்கும்போது, இனிதான் வாழ்க்கை என்ற நிலையில் இருக்கும் இளைய சமூகம், இவ்வளவு பெரிய தொற்றை, இத்தனை அலட்சியமாக கையாள்வது, நிச்சயம் சரியான போக்கல்ல.

முடிந்தவரை விழிப்போடு இருப்போம்!