கோவிட் - 19 கொரோனா பரவுதலில், பல நாடுகளில் இப்போதுதான் நோய் பாதிப்பு கொஞ்சம் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவரும் நாடுகள் அனைத்திலும், லாக்டௌன் வேகமாகத் தளர்த்தப்பட்டும் வருகிறது. இவை யாவும் உலகம் முழுக்க, பெரும்பாலான நாடுகள் இயல்புக்குத் திரும்ப வழிவகுத்துள்ளது. ஆனால் லாக்டௌன் தளர்வு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால மருத்துவரான மைக் ரேயன் இதுகுறித்துப் பேசும்போது, ``ஒரு சில நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றாலும் தென் அமெரிக்கா, தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நோய் தீவிரமடைந்து கொண்டுதான் போகிறது. கொரோனா இத்தனை மாதங்களில் நமக்கு சொல்லிக்கொடுத்துள்ள முக்கியமான பாடமே, இந்த வைரஸ் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பரவும் என்பதுதான். எந்த அடிப்படையில் இந்த வைரஸ் பரவுகிறது என்பதுகூட நமக்குத் தெரியவில்லை" என்று கூறியிருந்தார்.

இன்னொரு பக்கம் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேனாம், ``இந்தியா பிரேசில் பிரிட்டன் போன்ற நாடுகள், கொரோனாவை கையாள கற்றுக் கொண்டுவிட்டது. வரும்நாள்களில், அவை தன்னைத்தானே பார்த்துக் கொள்ளும்" எனக்கூறிவிட்டார்.

இருப்பினும்,  ஒரேநாளில் 49,000 நோயாளிகள் என்பதுதான், இந்தியாவில் சராசரியாக இருக்கிறது. கொரோனா நோயின் தீவிரத்தைப் பொறுத்தவரையில், நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தால், மருத்துவக் கட்டமைப்பில் சிக்கல் ஏற்படும் எனத் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்தது. இந்தச் சிக்கலை தவிர்க்க எண்ணி, வீட்டு மருத்துவமும் - வீட்டுக்குள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கவும் அரசு சார்பில் சில முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவொன்றில், வீட்டுக்கு வெளியே இருக்கும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை விட, வீட்டின் சொந்த உறுப்பினர்களால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது என தென்கொரியா நாட்டை சேர்ந்த ஆய்வாளர்களின் ஆராய்ச்சி முடிவில் கண்டறியப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

மிகபிரம்மாண்டமாக நடத்தப்பட்ட அந்த ஆய்வில், 100 பேரில் 2 பேருக்கு வீட்டு உறுப்பினர்கள் அல்லாதவர்களிடம் இருந்து தொற்று ஏற்பட்டு உள்ளது. அதேவேளையில், 10ல் ஒருவருக்கு தொற்றானது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

வயது அடிப்படையில் எடுத்து கொண்டால், டீன் ஏஜ் பருவத்தினர் அல்லது 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட வீட்டில் உள்ளவர்களிடம் தொற்று விகிதம் அதிகளவில் காணப்படுகிறது.

ஏனெனில், இந்த வயதினர், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அல்லது ஆதரவு அதிகம் தேவைப்படுகிறது. 9 மற்றும் அதற்கு குறைந்த வயதுடைய குழந்தைகளுக்கு, குடும்பத்தினரால் குறைவாகவே தொற்று ஏற்படுகிறது.

இதேபோன்று, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதற்கான அறிகுறிகள் தென்படாதவர்களாக முதியவர்களை விட குழந்தைகள் அதிகளவில் இருக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த ஆய்வு உண்மையாக இருக்கும்பட்சத்தில், இனிவரும் நாள்களில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் முடங்கியிருப்பது வேண்டாம் என அறிவுறுத்தப்படும் நிலை ஏற்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நேற்றைய தினம்தான் தமிழ்நாட்டில் புதிதாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எவ்வளவு வேகமாக நோயாளிகள் கண்டறியப்படுகின்றனரோ, அதே அளவு வேகமாக குணமும் ஆகின்றனர். அப்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,504 பேர் குணமடைந்துள்ளனர். 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை நேற்று மாலை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 6785 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1,299 பேருக்கும் விருதுநகரில் 424 பேருக்கும் செங்கல்பட்டில் 419 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 349 பேருக்கும் கன்னியாகுமரியில் 266 பேருக்கும் மதுரையில் 326 பேருக்கும் ராணிப்பேட்டையில் 222 பேருக்கும் தேனியில் 234 பேருக்கும் திருவள்ளூரில் 378 பேருக்கும் தூத்துக்குடியில் 313 பேருக்கும் திருச்சியில் 217 பேருக்கும் விருதுநகரில் 424 பேருக்கும் புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

- ஜெ.நிவேதா