கொரோனா பரவல் குறித்து ஒவ்வொரு நாளும் உலக சுகாதார நிறுவனத்தினர் பத்திரிகைகளில் உரையாடி வருகின்றனர். சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா இன்று வரை உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது மட்டுமின்றி, உலக நாடுகளின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். இதற்கிடையே கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் அனைத்தும் மிகத்தீவிரமாக இயங்கி வருகின்றன.
 
தற்போது, உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 802,363 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 25,644,319 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17,945,083 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், பல நாடுகள் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனைக்கு வந்துள்ளன. கொரோனா பாதிப்புகள் உலகம் முழுவதும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இல்லை. இதன்காரணமாக கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பை உலக அவசரநிலை பேரிடராக என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. கொரோனா தொற்றால் உடல்ரீதியான பாதுப்புகள் தொடங்கி மனம், மேலும் பொருளாதார ரீதியான பாதிப்புகளையும் பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.

கடந்த முறை உலக சுகாதார நிறுவனத்தினர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது,``கொரோனா வைரஸின் முழுமையான செயல்பாடுகள் மற்றும் பரவும் விதம் ஆகியவை குறித்த தெளிவான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. இது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. தொடக்கத்தில் வயதானவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது இளைஞர்கள் மத்தியிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக 20, 30 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் மூலம் கொரோனா அதிக அளவில் பரவுகிறது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் அதிகரித்துள்ளதால், வைரஸ் பரவலுக்கான வாய்ப்பு நிறைய உள்ளது. அதே சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கான தொழில்நுட்பமும், அறிவும் நம்மிடம் உள்ளது. தற்சமயத்தில் நமக்கு தேச ஒற்றுமையும், உலகளாவிய ஒற்றுமையும் மிகவும் அவசியமானது" என்று கூறியிருக்கிறார்.

கடந்த 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு பெருந்தொற்றால் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் ஐந்து கோடி மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தவேண்டி, உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கை பின்பற்றி வந்தன. இந்நிலையில் பொருளாதாரரீதியாக நாடுகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் தற்போது பல நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவிலும்கூட, இப்படியான ஊரடங்கு தளர்வுதான் தற்போது நடைமுறையில் இருக்கிறது.

ஆனால் இவ்வாறாக தளர்வுகளை செய்து வருவது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பினர் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக எந்த நாடும் நினைத்துக் கொள்ளவேண்டாம். இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தாமல் சகஜ நிலைக்கு திரும்புவது பேரழிவை ஏற்படுத்தும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.