நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பில் 31 சதவிகித நோயாளிகளைக் கொண்டிருக்கும் மகாராஷ்டிரத்திலும், தமிழகத்திலும் விரைவில் கொரோனா உச்சடையும் என்று இந்தோ ஆசிய செய்திச்சேவையை (Indo-Asian News Service) சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தற்போதைக்கு, நாட்டில் மொத்த கொரோனா நோயாளிகளில் 81 சதவிகித கொரோனா நோயாளிள் 10 மாநிலங்களில்தான் இருக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். அந்த 10 மாநிலங்களாக அவர் குறிப்பிட்டவை, மகாராஷ்ட்ரா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், தெலுங்கானா, பீகார், குஜராத், உத்தரபிரதேசம் ஆகியவற்றை பிரதமர் கூறியிருந்தார். இந்த இடங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினாலேவும், தேசத்தில் சூழலை கட்டுப்படுத்திவிடலாம் என அவர் கூறியிருந்தார்.

இப்படியான சூழலில், இந்தியாவில் கொரோனா நோயாளிகளில் மகாராஷ்டிரத்தில் 23 சதவிகிதமும், தமிழகத்தில் 8 சதவிகித கொரோனா நோயாளிகளும் இருக்கிறார்கள் என்பதும், இந்த மாநிலங்களில் விரைவில் கொரோனா உச்சம் அடைந்து, விரைவில் அங்கு கொரோனாவில் இருந்து விடுபடும் காலம் தொடங்கும் என்றும் தற்போது நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அந்த மருத்துவ நிபுணரொருவர் இது பற்றி கூறுகையில், ``மகாராஷ்டிரமும், தமிழகமும் கொரோனா உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 10 மாநிலங்களில், தொற்றுப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டால் ஒட்டுமொத்த நாட்டிலும் கொரோனா கட்டுப்படும் என்று குறிப்பிட்டதைப் போலவே இவ்விரு மாநிலங்களிலும் கொரோனா உச்சமடையப்போகிறது.

மகாராஷ்டிரம் மற்றும் தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதும், நாள்தோறும் குணமடைவோரின் எண்ணிக்கையால் உச்சமடைவது தடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் ஜூலை மாதம் இறுதி வாரத்தில் கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்டது. பிறகு அது மெல்ல குறைந்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

இதுபற்றி இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தொற்றுநோய் துறை பேராசிரியர் டாக்டர் பிரபாகரன் துரைராஜ் பேசும்போது,``டெல்லியைப் போலவே மகாராஷ்டிராவும், தமிழகமும் கொரோனா உச்சத்தை . நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா உச்சமடைவது குறித்து எதையும் உறுதியாக கூற முடியாது, தற்போதிருக்கும் அமைப்பைப் பார்க்கும் போது உச்சமடைவதை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது" என்று கூறியுள்ளார்.

டெல்லியில் கொரோனா பரிசோதனை மையத்தின் தலைவர் அல்பனா ரஸாதான் கூறுகையில், ``ஜூலை கடைசி வாரத்தில் டெல்லியில் கொரோனா உச்சத்தை அடைந்தது. பிறகு கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்தது, இதுதான் உச்சமடைவதன் உதாரணம், அதுபோலவே மகாராஷ்டிரம், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு பிறகு திரும்ப கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்துவிடும்

நாட்டில் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் கொரோனா உச்சமடையாது, புவியியல் அமைப்புக்கு ஏற்ப கொரோனா உச்சமடைவது மாறுபடும்" என்று கூறுயிருக்கிறார்.

``மாநிலங்களில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்படும் போதுதான் உச்சமடைவது தெரியவரும் என்பதால், தற்போது மகாராஷ்டிரத்திலும் தமிழகத்திலும் கொரோனா பரிசோதனை முன்பைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது. போதுமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இது சாத்தியமில்லை" என்றும் ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து, மாநிலங்கள் தோறும் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டு வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.