கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் பணியில் முன்னணியில் இருக்கிறது. இந்த மருந்து தொடர்பான முதற்கட்ட பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. மருந்து தொடர்பான 2ஆம், 3ஆம் கட்ட பரிசோதனைகளை நம் நாட்டில் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் இங்கிலாந்து அஸ்த்ரா ஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்த மருந்து தொடர்பான முதற்கட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்தகட்ட பரிசோதனைகளை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, குறிப்பிட்ட பல்கலைக்கழகம் கடந்த மாதம் 25ஆம் தேதி விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து இப்போது இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.

அதன்படி நாட்டில் 18 வயது நிரம்பிய சுமார் ஆயிரத்து 600 பேரிடம் இந்த பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக்காக டெல்லி எஸ்ம்ஸ் மருத்துவமனை, ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துக் கல்லூரி என 17 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2ஆம் கட்ட பரிசோதனைகள் தொடர்பான விரிவான ஆய்வறிக்கை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வழங்கப்பட்ட பின்னரே 3ஆம் கட்ட ஆய்விற்கு அனுமதி வழங்கப்படும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, முதல் முறை இந்த மருந்தை மனிதர் உடலில் செலுத்தப்படும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான அறிக்கை கோரப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட பரிசோதனை 29 நாட்கள் நடக்கும், அதன் பின் ஆய்வறிக்கையின்படி அடுத்தகட்ட பரிசோதனைக்கு அனுமதி கிடைக்கும்.

இந்த மருந்து தொடர்பான 2ஆம், 3 ஆம் கட்ட பரிசோதனைகள் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. பிரேசில் நாட்டில் இந்த மருந்து குறித்து 3ஆம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தென் ஆப்ரிக்காவில் முதல் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே இந்தியாவிலும் இந்த தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ரஷ்யா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு மருந்து வெற்றி அடைந்துள்ளதாகவும் ஆக்ஸ்ட் மாதம் முதல் அது மக்களுக்கு அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் 90 நிமிடங்களில் கொரோனா வைரஸ் முடிவுகளை அறியும் வகையில் இரண்டு அதிவேக கோவிட் 19 சோதனைகள் பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவை பிரிட்டன் மருத்துவமனைகள், இல்லங்கள் மற்றும் காப்பகங்களில் விரைவில் அமலுக்கு வரும் என்று பிரிட்டன் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை LamPORE ஸ்வாப் சோதனைகள் மற்றும் DnaNudge சோதனைகள் என்று அழைக்கப்படுகின்றன.

லேம்போர் ஸ்வாப் சோதனைகளை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான ஆக்ஸ்ஃபோர்டு நானோபோர் என்னும் நிறுவனம் வழங்குகிறது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் துணை நிறுவனரும் இந்திய வம்சாவளியுமான, கார்டன் சங்கேரா கூறும்போது, ''லேம்போர் சோதனைகள் ஸ்வாப் மற்றும் உமிழ்நீர்ப் பரிசோதனைகள் மூலம் 60 முதல் 90 நிமிடங்களில் கரோனா வைரஸ் இருப்பதைக் கண்டறிந்துவிடும்.

கோவிட் 19 மட்டுமல்லாது பிற வைரஸ் கிருமிகளையும் இவை கண்டுபிடிக்க வல்லவை. அடுத்த வாரத்தில் இருந்து 450,000 லேம்போர் சோதனை உபகரணங்களை எங்கள் நிறுவனம் உருவாக்கி அளிக்கும்'' என்றார்.