இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 2 கோடியை தாண்டியது. இதுவரை மொத்தம் 2 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரத்து 858 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 27 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த மாதம் 6-ந் தேதி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. இந்தியாவில் தற்போது 1,348 பரிசோதனை கூடங்கள் உள்ளன. இவற்றில் பொதுத்துறையை சேர்ந்த 914 கூடங்களும், தனியாருக்கு சொந்தமான 434 கூடங்களும் அடங்கும்.

இந்தியாவில், கொரோனாவுக்கான பரிசோதனைகள் உலகிலேயே அதிகமாக செய்யப்படுவதாக இந்திய அரசு பெருமையாக சொல்லி வந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், இதையே கூறி வந்தார். ட்ரம்ப் பேசும்போது, `அமெரிக்காதான் பரிசோதனைகளில் முதலிடத்தில் இருக்கிறது' என்றும், `அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது' என்றும் குறிப்பிட்டார். 

இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் சார்பில், ஆகஸ்ட் 3 ம் தேதி வரையில், இந்தியாவில் மொத்தமாக 2.08 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியானது. 

``இந்தியாவின் மொத்த மக்கள் தொகை, 138 கோடி. இதோடு ஒப்பிடுகையில், இந்தியா குறைவாகவே தன் மக்களை பரிசோதித்துள்ளது" என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞாணி சௌமியா சுவாமிநாதன் குறிப்பிடுகையில்,

``ஜெர்மனி, தாய்வான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் - தங்கள் மொத்த மக்கள் தொகையில் மிகக் குறைவான நபர்களுக்குத்தான் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, அமெரிக்காவில்கூட அதிகமாக உள்ளது. 

இப்படி பரிசோதனைகளை குறைவாக வைத்துக்கொண்டு, கொரோனாவுக்கு எதிராக போரிடுவது, கண்ணை மூடிக்கொண்டு தீயை அணைப்பதற்கு சமமானது. 

ஒவ்வொரு நாட்டுக்கும், அதன் மக்கள் தொகைக்கு ஏற்பவும், பரிசோதனை செய்யப்படுபவர்களில் எத்தனை சதவிகிதம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்படுகிறது என்பதும் மிகவும் முக்கியமான கணக்கு. இதில் இரண்டாவது சொன்னது, அதிமுக்கியம். இது, 5 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால், பரிசோதனைகள் போதவில்லை என்று பொருள்" எனக்கூறியிருக்கிறார். இதன் அடிப்படையில்தான் இந்தியாவில் அதிக சோதனைகள் செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டிருப்பதாக பார்க்கவேண்டியுள்ளது.

மேலும் பேசியவர், ``ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும், கொரோனா விஷயத்தில் பரிசோதனை மட்டுமன்றி, இன்னும் நிறைய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, மருத்துவனைகளில் படுக்கை வசதிகள் - தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கான வசதிகள் - ஐ.சி.யூ. வசதிகள் - ஆக்ஸிஜன் வசதிகள் போன்றவற்றையெல்லாம் அனைத்து அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். 

மேலும், ``அனைத்து நாடுகளிலும், கொரோனா சமூகப் பரவலாகத்தான் இருக்கிறது என்பதற்கு சான்றுகள் இருக்கிறது. அனைத்தையும் கண்கூடாக பார்க்க முடிகிறது. அப்படியிருக்கும்போது, நாடுகள் அனைத்தும் கூடுதல் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். லாக்டௌன் எனப்படும் பொது முடக்கம் மட்டுமே கொரோனாவுக்கு தீர்வாக இருக்காது என்றாலும்கூட, அது கொரோனா பரவலை தடுக்க நிச்சயம் உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆகவே அரசாங்ககள், லாக்டௌனை  நாடு முழுக்க அமல்படுத்தி, பரவலை முடிந்தவரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முயலவும்" என்றுள்ளார்.

 

- ஜெ.நிவேதா