கொரோனா வைரஸின் தாக்கம், இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. குறிப்பாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இதன் வீரியம் இன்னும் அதிகரித்திருக்கிறது. தொடக்கத்தில் ஆயிரங்களில் அதிகரித்துக் கொண்டிருந்த கொரோனா, இப்போதெல்லாம் லட்சத்தை தொட முயன்றுக் கொண்டிருக்கிறது.

இன்றைய தேதிப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,65,864 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 75,062 -ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,71,784 ஆக உயர்ந்துள்ளது. 9,19,018 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 72,939 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 77.74% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் அதிகபட்சமாக 95,735 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 1,172 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில், அமெரிக்கா மற்றும் பிரேசில் முறையே 9,979 மற்றும் 9,799 இறப்புகளைப் பதிவு செய்துள்ளன. ஆனால் இந்த நாடுகளை. ஒப்பிடுகையில், இதே காலகட்டத்தில் இந்தியா 13,418 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 95,529 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை இல்லாத அளவாக 1168 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

நாட்டில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 44,62,965 ஆக உள்ளது. இதுவரை, இந்தியாவில் மொத்தம் 75091 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக, இந்த பூமியில் ஒவ்வொரு ஐந்தாவது கொரோனா வைரஸ் மரணம் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் என்றும் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிகிறது. தினசரி இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதற்கான எடுத்துக்காட்டாக - ஏப்ரல் முதல் இந்தியாவில் கொரோனா உச்ச நிலை ஏற்பட தொடங்கியது. செப்டம்பர் முதல் வாரம் மற்றும் இரண்டாவது வாரத்தில் பாதிப்பும் பலி எண்ணிக்கையும் மிகமிக அதிகமாக உள்ளதென்பதை சொல்லலாம்.

செப்டம்பர் 9 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். உலகளாவிய தினசரி இறப்புகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் சுமார் 4,500 ஆக இருந்தது. ஆனால் ஜூலை முதல் இறப்புகள் அதைவிட அதிகரிக்க தொடங்கியது.

ஆகஸ்ட் மத்தியில் சராசரி உலகளாவிய தினசரி இறப்புகள் 6,000 ஐ தாண்டின. இருப்பினும், செப்டம்பர் முதல் வாரத்தில், தினசரி இறப்புகள் சற்று குறைந்துள்ளது. இப்போது ஒரு நாளைக்கு 5,000 க்கும் அதிகமான நபர்கள் உலகில் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4039 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தாலும்கூட, தமிழகத்தில் ஓரளவு நிலைமை கட்டுக்குள்ளேயேதான் இருக்கிறது. கடந்த பல வாரங்களாகவே, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 5,500 என்பதை ஒட்டியே இருக்கிறது. இருப்பினும் ஊரடங்கு தளர்வுகள் முழுவதுமாக அமலில் இருப்பதால், வரும் வாரங்களில் தமிழகமும் கொரோனாவில் உச்சத்தை அடையலாம் என கணிக்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்துவரை, கொரோனாவை விட மிக மோசமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதால், இப்போதைக்கு அரசிடமிருந்து மருத்துவ சேவை மட்டுமன்றி, பொருளாதார சேவைகளும் மக்களுக்கான தேவையாக இருக்கிறது.