பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரேனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஆகஸ்ட் 13 -ம் தேதி நள்ளிரவில் அவரின் உடல்நிலை மோசமானதால், அப்போதிருந்து அவர் செயற்கை சுவாசத்தில் இருக்கிறார் என மருத்துவமனை தரப்பில் சொல்லப்பட்டது.

குறிப்பாக மூச்சுத் திணறல் ஏற்பட்ட எஸ்பி பாலசுப்ரமணியம் ஐசியூவுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையின் இந்த அறிக்கை ரசிகர்கள் மற்றும் அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்களும் எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தித்து வந்தனர்.

இதற்கிடையில், நேற்றைய தினம் அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகனான எஸ்பி சரண் தெரிவித்தார். தொடர்ந்து எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகனான எஸ்பி சரண் அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு தெரியப்படுத்தி வருகிறார்.

எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு என மருத்துவமனையில் பிரத்யோக அறை அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு அவரது பாடல்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக சுவாரஸ்யமான விஷயமொன்று சொல்லப்படுகிறது.

வென்டிலேட்டரில் உள்ள எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அவர் பாடிய காதல் பாடல்கள், பக்தி பாடல்கள், மெல்லிசை பாடல்கள் என அவர் சிகிச்சை பெறும் அறையில் ஒலிக்கவைக்கப்படுகின்றன. இதன் மூலமாக அவரின் மன அழுத்ததை குறைத்து நினைவு திரும்ப உதவலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இசைக் காதலரான எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு அவரது பாடல்களை கொண்டே சிகிச்சையளிப்பது, பலருக்கும் ஆச்சர்யத்தை தந்துள்ளது. பலரின் மன காயங்களுக்கும் வேதனைக்கும் மருந்தாக உள்ள எஸ்பி பாலசுப்ரமணியத்தின் பாடல்கள் அவருக்கே மருந்தாக அமைந்திருப்பது இசையே அவருக்கு நன்றிக்கடன் செய்வதாக உள்ளது என்கின்றனர் ரசிகர்கள்.

பிரபலங்களோடு இணைந்து, தமிழக அரசியல் கட்சியினரும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை தேறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி.பி.யின் உடல் நலம் பெற, தமிழக அரசு உறுதுணையாக இருக்குமென கூறி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்திருந்தார். முதல்வர் பழனிச்சாமியும், இதனை ஆமோதித்து, எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டியிருந்தார். இந்நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில், `கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் தேறி வருகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. இதயம் கவரும் இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பாட்டுப் பயணத்தைத் தொடரட்டும்!' என்று குறிப்பிட்டுள்ளார். 

ஸ்டாலினுக்கு முன்பு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், எஸ்.பி.பி. குணம் பெற வேண்டி இன்றைய தினம் வீடியோ வெளியிட்டிருந்தார். தன்னுடைய வீடியோவில், ``50 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடி கோடி மக்களை மகிழவைத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது அபாயகட்டத்தை தாண்டியிருப்பது கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கும் அவர், சீக்கிரம் முழுமையாக குணமடைய, எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.