சீனாவின் வுகான் சந்தைப் பகுதியில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. கொரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளை உலக நாடுகள் பலவும் தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால், தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர குறைந்தது இன்னும் ஒரு ஆண்டாவதாக ஆகலாம் என்று தெரிகிறது. 

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் வுகான் நகர ஆய்வகம் ஒன்றிலிருந்து இந்த வைரஸ் வெளியேறி இருக்கலாம். இது செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் என சீனா மீது குற்றம் சாட்டி வந்தன. சீனாவுக்கு எதிரியாக இருக்கும் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் பலவும் கொரோனா வைரஸ் உருவாக்கம் குறித்து கருத்துத் தெரிவித்து வந்துள்ள நிலையில், இந்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்துக் கூறியிருக்கிறார். ஆங்கில ஊடகமான என்.டி.டி.விக்குப் சில மாதங்களுக்கு முன் பேசியிருந்தார்.

அப்போது அவர், ``கொரோனாவுடன் வாழ்வதற்கு நாம் பழக வேண்டும். அது இயற்கையான வைரஸ் இல்லை என்பதால் அதனுடன் வாழப் பழகுவது மிகவும் முக்கியமானது. கொரோனா செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரஸ், அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டுள்ளன’’ என்றார்.

மேலும், ``இரண்டாவது விஷயம் வைரஸைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம். வைரஸை உடனடியாகக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் நமக்குத் தேவை. அதற்காக நமக்கு சிறந்த தொழில்நுட்பம் வேண்டும். இதை நாம் எதிர்பார்க்க முடியாது, ஏனென்றால் அது ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது’’ என்றும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். 

வூகான் ஆய்வகத்தில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும், இதுதொடர்பான உண்மைகளை சீனா மறைத்து விட்டதாகவும் பிற நாடுகள் கூறும் அனைத்து தகவல்களையும், தொடக்கம் முதலே குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால் இதற்கு சீனாவும், உலக சுகாதார அமைப்பும் மறுப்பு தெரிவித்தன. இந்நிலையில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாகவும், இதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் சீன வைராலஜிஸ்ட் லி மெங் யான் தெரிவித்துள்ளார். கொரோனா தொடர்பான உண்மைகளை சீனா உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் முன்னரே, அரசுக்கு அனைத்து தகவல்களும் முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

ஹாங்காங் பொது சுகாதார மையத்தில் பணியாற்றும் அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு சென்றார். கொரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``எனது ஆய்வு முடிவை நான் பணிபுரியும் இடத்தில் உள்ள அதிகாரியிடம் கொடுத்தேன். சீன அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு சார்பில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் சீன அரசுக்கு பயந்து கொண்டு யாரும் அதனை வெளியிட மறுக்கின்றனர். உண்மையை மக்களுக்கு தெரியாமல் மறைக்கவே பார்க்கின்றனர். இது உலக மக்களின் நலத்தை பற்றிய முக்கிய தகவல்.

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது கிடையாது. இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. அவற்றை விரைவில் வெளியிட இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார் அவர்.