இந்தியாவில் கொரோனா மாதிரிகள் பரிசோதனை அதிகம் செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை  சோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியை நெருக்கி இருப்பதாக  ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.

பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும் உச்சம் பெற்று வருகின்றது. இது 2வது கட்ட அலை என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்பட சுகாதார நிபுணர்கள் கூறி உள்ளனர்.

இருப்பினும் சென்னையில் கொரோனாவிற்கு தினமும் 1000 பேர் பாதிக்கப்படுகின்ற நிலைதான் தற்போது உள்ளது. முன்னதாக 1,300 பேர் வரை அதிகரித்து சென்ற பாதிப்பு தற்போது ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி கொரோனா பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டவர்களின் சதவீதம் 10.7 இருந்தது. அது கடந்த 5-ந் தேதி 7.8 சதவீதமாக குறைந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கொரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 90% ஆக உயர்ந்துள்ளது. அதில், இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதித்து 11,264 பேர் (8%) சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

மேலும், இன்று (செப் 7) காலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களில் 1,27,528 பேர் குணமடைந்துள்ளனர். 11,264 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2,862 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமும் 13 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ததன் மூலம் தான் இந்த சாதனையை செய்ய முடிந்தது எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆகஸ்டு 10-ந் தேதி பாதிப்பு சதவீதம் 7 ஆக இருந்தது. இ-பாஸ் தளர்வின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு லட்சக்கணக்காணவர்கள் வந்ததால் தினசரி பாதிப்பு 1,200 ஆக அதிகரித்தது.

ஆனாலும் மாநகராட்சி தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதன் காரணமாக பாதிப்பு குறைந்தது. கடந்த 3 நாட்களாக பாதிப்பு 1000த்துக்கும் கீழ் குறைந்துள்ளது எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. மேலும் அனைத்து கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் செயல்படுவதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 100 சதவீதம் பேர் பணியாற்றி வருகிறார்கள். தொற்று பரவாமல் இருக்க அரசின் வழிகாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், பொது மக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் இல்லாமல் வெளியில் நடமாடுகிறார்கள்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கூறப்பட்டுவிட்ட நிலையில், சென்னையில் மீண்டும் கொரோனா 2-வது அலை வருமா என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. 

இதுகுறித்து மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் இன்று பேசியிருக்கிறார். அவர், ``பொதுமக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாக சென்று கண்காணிக்கிறோம். மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் தொடர்ந்து கண்காணிக்கப் படுகிறார்கள்.

குறிப்பாக தற்போது வேலை செய்கின்ற இடங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள், முதியோர் இல்லங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அறிகுறி காணப்பட்டால் அவர்கள் உடனடியாக பரிசோதனைக்கு உட்டுத்தப்படுகிறார்கள். தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளியே வரும்போது முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே நோய் தொற்றை குறைக்க முடியும்.

தனியார், கொரோனா பரிசோதனை மையங்களில் கொரோன சோதனை செய்து கொள்ள வருகைதரும் நோயாளிகளின் முழு விவரங்கள் மற்றும் தகவல்களைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

சோதனை செய்ய வருபவர்களின் சுய விவரங்களைச் சேகரிக்கப்பட வேண்டும்,  அவர்களின்  பெயர், அவரின் முழு முகவரி (Address proof), வயது, பாலினம், அவர்களின் தொழில் விவரம் மற்றும் குடும்பத்தினர் விவரங்களைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனையினை துல்லியமான முறையில் மேற்கொண்டு, முடிவினை 24 மணி நேரத்தில் சோதனை முடிவு தெரிவிக்க வேண்டும்.

பரிசோதனை மையங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களும் தொழில்நுட்பத் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பரிசோதனைக் கூடங்கள் பின்பற்ற வேண்டும். சோதனை மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உடைகளை வழங்க வேண்டும்" என்று அவர் கூறினார்.