கொரோனா பாதிப்பானது, உலகளவிலும் இந்திய அளவிலும், ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய அளவில் அதிகமாகி வருகின்றது. இந்திய அளவிலும் இதுவரை 13 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்போதும்கூட, ஒவ்வொரு நாளும் 40,000 என்று எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 

கொரோனாவை குணப்படுத்த அதிகாரபூர்வமாக மருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதாலேயே, எளிதில் கொரோனா பரவுவதாலும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. ஆரம்பத்தில் கடுமையாகப் பாதிப்படைந்த பல நாடுகளும் தற்போது பாதிப்பில் இருந்து மீண்டு வந்தாலும் ஆரம்பத்தில் குறைவாகப் பாதிப்படைந்த நாடுகள் தற்போது கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

இந்தியாவும், அப்படியான ஒன்றுதான். இந்திய அளவில், மாநிலங்கள் அளவிலும் இவையாவும் பொருந்திப்போகும். உதாரணத்துக்கு, கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களாக நாட்டிலே மிக அதிகமாக பாதிப்புக்குள்ளான நகரமாக இருந்து வந்த மும்பையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தடுப்பு மருந்து தயாராக சில காலங்கள ஆகும் என்பதால், அங்கிருக்கும் அதிகாரிகள் தொடர்ந்து, இரண்டாவது அலை எழுமோ என்ற பயத்திலே இருந்து வருகின்றனர். 

அதேபோல, ஆசியாவின் மிகப்பெரிய சேரிப்பகுதியான தாராவியில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை மிக குறைந்த அளவில் பதிவாகி வருகிறது. அந்த பகுதியில் தற்போது 98 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் பேசுகையில், ``பொதுசுகாதார அவசரநிலை பிரகடனம் கடந்த ஜனவரி 30-ம் தேதி அறிவிக்கப்பட்டபோது சீனாவைத் தவிர்த்த வெளியே உள்ள நாடுகளில் 100-க்கும் குறைவான பாதிப்புகளே இருந்தன. வைரஸ் தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால், தற்போது உலகளவில் தற்போது கிட்டத்தட்ட 16 மில்லியன் நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். வைரஸால் பாதிப்படைந்தவர்களில் சுமார் 6.4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். கடந்த ஆறு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது” என்று கூறியிருக்கிறார்ர். அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் தொடர்ந்து பேசும்போது, ``கொரோனா வைரஸ் உலகத்தையே மாற்றிவிட்டது. சொல்லப்போனால், உலக நாடுகளையும் மக்களையும் கொரோனா ஒன்றிணைத்துவிட்டது. கொரோனா தொடர்பான விஷயங்களில் மற்ற நாடுகளுக்கு ஆதரவளிக்க உலக சுகாதார நிறுவனமும் கடந்த ஆறு மாதங்களாக அயராது உழைத்து வருகிறது. இதற்காக உழைத்தவர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனாலும் இன்னும் நாம் அனைவரும் செல்ல வேண்டிய தூரம் சற்றே நீண்டது. கடினமானதும்கூட.

இதுவரை உலக சுகாதார நிறுவனம் அறிவித்த உலகளாவிய பெருந்தொற்று நோய் மற்றும் மருத்துவ அவசர நிலையில், மிக மோசமானது இந்த கோவிட் 19 கொரோனா தொற்றுதான்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாண்டது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பி உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதிகளையும் நிறுத்தினார். இதனை தொடர்ந்து வைரஸ் தோன்றியது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பல நாடுகளும் அழுத்தம் கொடுத்தன. இந்த நிலையில் ஆய்வினை மேற்கொள்ள சிறப்பு குழு ஒன்று தற்போது சீனாவுக்கும் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் ரேயான் பேசும்போது, ``உலக நாடுகள் அனைத்திலும் இப்போது நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியாக இது எல்லாம் நாட்டுக்குமே பின்னடைவுதான். ஆனால் இப்போதைக்கு வேறு வழி நமக்கு இல்லை. கொரோனாவை எந்தளவுக்கு புரிந்துக் கொள்கிறோமோ, அந்தளவுக்கு எளிதாக இதிலிருந்து வெளியேவரலாம். அத்தியாவசப்பட்டால், மிக சிறிய அளவுக்கு நாடுகளுக்கிடையேயான பொருளாதாரத்தை மேற்கொள்ளலாம்" என்று கூறியிருக்கிறார்

 

- ஜெ.நிவேதா