மருத்துவத்தில், ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடையும்போது, அங்கு நோய்க்கு எதிரான மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (ஆங்கிலத்தில் Herd Immunity) உருவாகி மற்றவர்கள் நோயிலிருந்து காக்கப்படுவார்கள் என்ற கருத்து இருக்கின்றது. 

இதுகுறித்து சமீபத்தில் விளக்கமளித்த உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதானோம், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்னும் வார்த்தையே தடுப்பூசி தொடர்புடையது என்று தெரிவித்துள்ளார். அம்மை நோய்க்கு எதிரான மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெற 95 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் இதனால் எஞ்சியுள்ள 5 சதவீதம் பேரால் மற்றவர்களை பாதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இதுபோல போதிய அளவு தடுப்பூசி செலுத்தப்படும்போது மட்டுமே மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெற முடியும் என்று விளக்கியுள்ள அதானோம், கொரோனாவுக்கு எதிரான போரில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி மக்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது சுமார் மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்று, ஆதலால், மீண்டும் பாதிக்கப்படலாம் என்று ஐ.சி.எம்.ஆர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு பயனுள்ள தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்ட பின்னர் எந்த மக்கள்தொகைக்கு முன்னுரிமை அளிக்கப்படும், ஒரு தடுப்பூசிக்கான காத்திருப்பு எப்போது முடிவடையும் என்பது போன்ற கேள்வி விவாதத்திற்குரியது.

இதுகுறித்து இன்றைய தினம் ஐசிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்க்கவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

``இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் தொற்று பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இது குறித்த புள்ளிவிவரங்களையும் சேகரித்து வருகிறோம். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி சுமார் மூன்று மாதங்கள் நீடிக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இன்னும் சில ஆய்வுகளின் படி, சில உடல்களில் ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும் என்று கூறியுள்ளது. 

குணமடைந்தவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி 90 நாள்களுக்குப்பின் குறையத் தொடங்கினால், மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். அதாவது 90 நாள்களுக்குப்பின் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது

எத்தனை பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் எத்தனைபேர் குணமடைந்துள்ளார்கள், குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று எத்தனை பேருக்குவந்துள்ளது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்

இது ஒரு புதிய நோயாகும், இது தொடர்பான தகவல்கள் தற்போது வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மீட்கப்பட்ட ஐந்து மாதங்களுக்குள் ஒரு நபரின் உடலில் எதிர்ப்புச்சக்தி குறைந்துவிட்டால், கொரோனா தொற்றுடன் மறுசீரமைப்பு செய்ய வாய்ப்பு உள்ளது என்று பார்கவா கூறினார்.

மேலும் "கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவர் நோய் எதிர்ப்புச்சக்தி வந்துவிட்டதாகவும், மீண்டும் பாதிக்கப்படமாட்டோம் என்று நம்பாமல், குணமடைந்ததற்கு பின்னரும் தொடர்ந்து முகக்கவசங்களை அணிந்துகொள்வது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பொருத்தமான நடமுறைகளை அவசியம்" என்று பார்கவா கூறினார்.