இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகையவை கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

 

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று (நவம்பர் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,27,026 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை நேற்று (நவ. 1) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது :

 

"தமிழகத்தில் நேற்று புதிதாக 2,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 1,509 பேர், பெண்கள் 995 பேர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 799 பேர், பெண்கள் 2 லட்சத்து 88 ஆயிரத்து 195 பேர், மாற்றுப்பாலினத்தவர்கள் 32 பேர்.

 

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 25 ஆயிரத்து 926 பேர். 13-60 வயதுக்குட்பட்டோர் 6 லட்சத்து 11 ஆயிரத்து 389 பேர். 60 வயதுக்கு மேற்பட்டோர் 89 ஆயிரத்து 711 பேர். நேற்று புதிதாக 73 ஆயிரத்து 12 மாதிரிகளுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 29 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது.

 

நேற்று புதிதாக 71 ஆயிரத்து 797 தனிநபர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 97 லட்சத்து 60 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது.

 

நேற்று தனியார் மருத்துவமனைகளில் 15 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 15 பேர் என, 30 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 2 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 28 பேர்.

 

தமிழகம் முழுவதும் தற்போது வரை 20 ஆயிரத்து 994 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3,644 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 94 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் அரசு சார்பாக 66, தனியார் சார்பாக 137 என, 203 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

 

நேற்று கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 686 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 533 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 792 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3,662 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை சென்னையில் 7,005 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்".

 

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது.

 

செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் சுமார் 30 சதவீத கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது: ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 46,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 81,84,082-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 470 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,22,111-ஆக அதிகரித்துள்ளது.

 

அக்டோபர் முதல் வாரத்திலிருந்து தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சீராக குறைந்து வந்துள்ளது. செப்டம்பரில் 26,21,418 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அக்டோபரில் பாதிப்பு சுமார் 30 சதவீதம் குறைந்து 18,71,498-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையானது இதுவரை நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 22.87 சதவீதமாகும். அதேபோல் அக்டோபரில் 23,433 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

 

மொத்தம் 74,91,513 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இது 91.54 சதவீதமாகும். தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 3-ஆவது நாளாக 6 லட்சத்துக்கு கீழ் உள்ளது. தற்போது 5,70,458 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த தொற்று பாதிப்பில் 6.97 சதவீதமாகும்.

 

நாட்டில் மொத்தம் 1,22,111 பேர் உயிரிழந்துள்ளனர். இது 1.49 சதவீதமாகும். புதிதாக மகாராஷ்டிரத்தில் 74 பேர், சத்தீஸ்கரில் 63 பேர், மேற்கு வங்கத்தில் 57 பேர், தில்லியில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 20 லட்சத்தை ஆக. 7-ஆம் தேதியும், 30 லட்சத்தை ஆக. 23-ஆம் தேதியும், 40 லட்சத்தை செப். 5-ஆம் தேதியும், 50 லட்சத்தை செப். 16-ஆம் தேதியும், 60 லட்சத்தை செப். 28-ஆம் தேதியும், 70 லட்சத்தை அக். 11-ஆம் தேதியும், 80 லட்சத்தை அக். 29-ஆம் தேதியும் கடந்தது.

 

"அக். 31 வரை நாடு முழுவதும் 10,98,87,303 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

அதில் அக். 31-ஆம் தேதி (சனிக்கிழமை) மட்டும் 10,91,239 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது