கொரோனா இரண்டாம் அலை நாட்டில் தீவிரமாகி உள்ள நிலையில் தடுப்பூசி திருவிழா மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட மக்களிடம் தடுப்பூசி குறித்த அச்சம் தணியவில்லை. 


தொடர்ந்து தடுப்பூசி குறித்த குழப்பமும், பயமும் தான் நிலவி வருகிறது. தடுப்பு மருந்தை தங்கள் உடலில் செலுத்திக் கொள்ள இன்னும் பலரும் விரும்பாமல் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிக்கும் ஒருவர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா என்று சந்தேகம் பலரிடம் நிலவி வருகிறது.


கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரது உடல் அதற்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இந்த சமயத்தில் அவர் தடுப்பூசி எடுக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்ட இது தடுப்பூசி உதவாது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறும் போது ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வது முக்கியம். கொரோனா தடுப்பூசி செலுத்தக்கொள்ள செல்லும் முன் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டுவிட்டு செலுத்துவது  நல்லது. 

முக்கியமாக முதல் டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு இரண்டாவது டோஸ் நிச்சயம் செலுத்திக்கொள்ளச் செல்ல வேண்டும். முதல் டோஸ் மட்டுமே கொரோனாவிடமிருந்து காப்பாற்றாது. முதல் டோஸுடன் ஒப்பிடும் போது இரண்டாவது டோஸ் போடும் போது பக்க விளைவுகள் பெரிய அளவில் இருக்காது. 


அதேபோல், தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் மரணம் அடைந்துவிடுவார்கள் என்ற செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.