உலகின் அனைத்து நாடுகளிலும், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு மருந்தை கண்டறியும் பணிகள் தீவிரமாக இருக்கிறது.

நாடுகளுக்கிடையே பலத்த போட்டி நிலவிவந்த சூழலில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மட்டும் தொடக்கத்திலிருந்தே முன்னணியிலிருந்து வருகிறது.

இந்த பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட தடுப்பூசியின் ஆய்வகப் பரிசோதனைகள் அனைத்தும் தற்போது முடிவடைந்திருக்கும் நிலையில், சில தினங்களுக்கு முன் இதை மனிதர்களுக்குத் தந்து பரிசோதித்திருந்தனர் ஆய்வகத்தினர். அதன் முடிவில் இந்த தடுப்பூசியானது, மனிதர்களின் உடலில் எந்தப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும், மேலும் கொரோனாவை எதிர்த்துப் போராடும் வகையில் அனைவரின் உடலிலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை இது தூண்டுகிறது என்றும் நேற்று உறுதிசெய்யப்பட்டது.

இப்போது ஆய்வானது இரண்டாம் கட்டமாகப் பரிசோதனை, இன்னும் விரிவுபடுத்தப்படவுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்த பிறகு, இது பொதுப் பயன்பாட்டுக்கு உகந்ததா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். ஒருவேளை உகந்தது என்றால், உலகம் முழுக்கவுள்ள மக்கள் அனைவருக்கும் இது உடனடியாகத் தரப்படும்.

பிரிட்டென் செய்த முதல் சுற்று மனிதப் பரிசோதனையில் இந்த தடுப்பூசி 1,077 பேருக்குச் செலுத்தப்பட்டுச் சோதிக்கப்பட்டது. இதில், இந்த தடுப்பு மருந்து ரத்த வெள்ளை அணுக்களையும், எதிர்ப்புரதங்களையும் கோவிட் - 19 கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராட வைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் இறுதி முடிவுகள், அடுத்தடுத்த கட்ட சோதனைக்கு பிறகே சொல்லப்படும். முடிவு வருவதற்குள்ளாகவே, பிரிட்டன் அரசு 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க கொள்முதல் ஆணை தந்துள்ளது.

இந்தத் தடுப்பூசியின் பெயர், ChAdOx1 nCoV-19. எப்போதுமே, தடுப்பூசி உருவாகக் கால தாமதம் ஆவது வழக்கம். ஆனால் இது அதிவிரைவாக எதிர்பாராத வேகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை உருவாக்கிய பின்னணி குறித்துப் பேசிய ஆய்வாளர்கள், இதற்காக சிம்பன்சி குரங்குகளுக்குச் சாதாரண சளியை ஏற்படுத்தக்கூடிய வைரஸை எடுத்துக்கொண்டு, அதனை மரபணு மாற்றம் செய்து இந்த தடுப்பூசி உருவாக்கியுள்ளதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

செலுத்தப்படும் நபர்களுக்குத் தொற்றுநோயை ஏற்படுத்தாதவாறு மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதெனக் கூறப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸின் வெளிப்புறத்தில் உள்ள 'ஸ்பைக் புரதம்' என்ற முள் போன்ற பாகம்தான் அந்த வைரஸ் மனித உடலின் உயிரணுக்களுக்குள் ஊடுருவப் பயன்படுத்தும் வழி. ஆகவே அந்த முள்ளை உடைத்தால், வைரஸ் மேற்கொண்டு வளர்வ்வதையும், அதனால் உடலில் ஏற்படும் பாதிப்பையும் தடுத்துவிடலாம். 

ஆகவே இந்த ஸ்பைக்கை அழிப்பது எப்படி என்பதற்கான ஆய்வுகள் முதன்முதலில் தொடங்கப்பட்டது. அது முடியவில்லை என்பதால், இந்த ஸ்பைக் போலவே தோற்றம் கொண்ட வேறொரு ஆரோக்கியமான மற்றும் தீங்கு விளைவிக்காத வைரஸை, செயற்கையாக உருவாக்கி அதை மனித உடலுக்குள் செலுத்தி, வைரஸ்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர் ஆய்வாளர்கள்.

அப்படியொரு முயற்சியில்தான், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சில வைரஸ்களை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த வைரஸ் கொண்டு, தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை வைரஸில், கொரோனாவின் ஸ்பைக் புரதத்துக்கான குறியீடுகளைப் போன்ற முள் பாகமும் செயற்கையாகச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கொரோனாவின் ஸ்பைக் புரதமேவும், பிரித்தெடுக்கப்பட்டு, அதனை இந்த தடுப்பு மருந்தின் மரபணுவுக்குள் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தி இருக்கிறார்கள். இதனால், தடுப்பூசியில் உள்ள வைரஸ் அனைத்தும், பார்ப்பதற்கு கொரோனா வைரஸ் போலவே தோற்றம் அளிக்கும். 

இப்படி வைரஸை குழப்புவதால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

இப்படி கொரோனா போலவே மாறுவேடம் பூண்ட மரபணு மாற்ற வைரஸ் மனித உடலுக்குள் செலுத்தப்படும்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் இதனை அடையாளம் காணவும், அதனோடு போரிடவும் பயிற்சி எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் பிறகு உண்மையான கொரோனா வைரஸ் எப்போதாவது உடலுக்குள் நுழையும்போது, அதனை உடனடியாக அடையாளம் காணவும், எதிர்த்துப் போராடவும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்குப் போதிய பயிற்சி இருக்கும்.

ஆகவே, கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்றாலும்கூட, அதனால் தொற்றாக மாற முடியாது. 

உலகின் கண்டுபிடிப்பு பணிகளில் இருக்கும் அனைத்து தடுப்பூசி நிறுவனங்களின் நோக்கமும், இப்படி உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு கொரோனாவுக்கு எதிராகப் போராடும் பயிற்சியை அளிப்பதுதான். பிரிட்டன் சிம்பன்சியின் உடலிலிருந்து வைரஸை எடுத்து - அதற்கு மாறுவேடம் தரித்தது போல ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக இதை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். 

- ஜெ.நிவேதா